தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக துபாய்சென்றார்.


தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த(Vijayakanth) கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று சென்னை திரும்புவார். அந்தவகையில் தற்போது அவர் சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார். இன்று காலை சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு ஜெர்கின் அணிந்தபடி முகக்கவசத்துடன் அவர் வீல்சேரில் அழைத்து வரப்பட்டார். லண்டன் மருத்துவர்கள் துபாய் வந்து அவருக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர். அவருடன் மனைவி பிரேமலதாவும் அமெரிக்கா செல்கிறார். விஜயகாந்த் ஏர்போர்ட் வந்த போது, அவரது நிலையை கண்டு அவரது ரசிகர்கள் மற்றும் அனுதாபிகள் சிலர் கண்ணீர் விட்டதை காண முடிந்தது. 





2018 முதல் சிகிச்சை..


விஜயகாந்த் முதன்முறையாக, கடந்த 2018 ஆம் ஆண்டு தான் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.  சென்னை திரும்பிய பின்னர் தீவிர அரசியலில் அவர் பெரும்பாலும் ஈடுபடவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போதுகூட அவர் வாகனத்தில் இருந்தவாறு கையசைத்துச் சென்றார். அதுவே பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.  அவரது ரசிகர்களும், தொண்டர்களும் எப்படி மேடைகளில் முழங்கிய விஜயகாந்த் இப்படி பொம்மை போல் ஆகிவிட்டாரே என்று தெரிவித்தனர். கட்சிக் கூட்டங்களில் பிரேமலதாவும், விஜய பிரபாகரும் பேசினர். இந்தத் தேர்தலில் தேமுதிக பெரிதாக தடம் பதிக்கவில்லை. எதுவாகினும், விஜயகாந்த் மீதான மக்கள் அபிமானம் மட்டும் குறையவே இல்லை.




எளிமையாகப் பிறந்தநாளைக் கொண்டாடிய விஜயகாந்த்:


அண்மையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடினார். 2006 ம் ஆண்டு முதல் தனது பிறந்தநாளை ‘வறுமை ஒழிப்பு தினமாக’ விஜயகாந்த் கொண்டாடி வரும் சூழலில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த ஆண்டு தனது பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க தொண்டர்கள் யாரும் வீட்டுக்கு வர வேண்டாம் என்றும் தேமுதிகவினர் அவரவர் ஊர்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குமாறும்  வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதனால் அவர் யாரையும் சந்திக்காமல் எளிமையாக பிறந்தநாள் கொண்டாடினார்.
பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன்பு கட்சிக் கொடி மற்றும் வண்ண விளக்குகளால் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.  


முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,  தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் அவர்கள் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டிருந்தார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.


தற்போது அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில் அவரது உடல்நலம் பூரண குணமடைய ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கேப்டன் விஜயகாந்த் நலமுடன் திரும்புவார் என வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.