Vijayakanth Health: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கடந்த 18ம் தேதி உடல்நிலை குறைபாடு காரணமாக, சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மருத்துவ அறிக்கை:


இந்நிலையில் அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை வெளியாகியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், “விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் 18 நவம்பர் 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 


விஜயகாந்திற்கு என்ன ஆச்சு?


தேமுதிக தலைவரும்  நடிகர் சங்க முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் தொண்டை வலி மற்றும்  உடல்நல குறைவால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தேமுதிக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், ”தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாதாந்திர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்” என தெரிவித்தனர்.  இதனிடையே, விஜயகாந்த் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால், அதற்கு தேமுதிக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாளில் விடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேமுதிக-வில் விரைவில் புதிய மாற்றங்கள்


இப்படிப்பட்ட சூழலில் நாடாளுமன்ற தேர்தல் வெகு தொலைவில் இல்லை. ஏற்கனவே, இண்டியா கூட்டணியும் தேசிய ஜனநாயக கூட்டணியும் தேமுதிக-வை புறக்கணித்துள்ள நிலையில், கட்சிக்கு புத்துயிர் ஊட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், கட்சி கட்டமைப்பில் விரைவில் மாற்றங்களை ஏற்படுத்த பிரேமலதா திட்டமிட்டிருக்கிறார்.


மு.க.ஸ்டாலின் பாணியை பின்பற்றும் பிரேமலதா ?


திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கட்சி பணிகளை கவனிக்க முடியாமல்போனபோது, செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை நியமித்தார். அதே பாணியை பின்பற்றி கட்சியின் பொருளாளராக உள்ள பிரேமலதாவை தேமுதிக-வின் செயல் தலைவராக விரைவில் விஜயகாந்த நியமிக்கவிருக்கிறார்.


விஜயபிரபாகரனுக்கும் பொறுப்பு


அதோடு, கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாமல் பிரச்சாரம், கட்சி பணிகள், நிகழ்ச்சிகள் என வலம் வரும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு தேமுதிக இளைஞரணி தலைவர் அல்லது செயலாளர் பொறுப்பும், தேமுதிக துணை செயலராக உள்ள விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ்க்கு பிரேமலதா வகிக்கும் பொருளாளர் பதவியும் விரைவில் கொடுக்கப்படவுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகம்


நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பான அதிகாரங்களும் பிரேமலதாவிற்கு வழங்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கும்போதோ அல்லது அவர் வீடு திரும்பிய பின்னரோ இந்த மாற்றங்கள் தேமுதிக-வில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.