தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டது. நேற்று காலை நுரையீரல் அழற்சி காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.
பின் அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் அவரது வீட்டில் வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் அவரது உடல் கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆயிரக்கணகான மக்கள் திரண்ட காரணத்தால் கோயம்பேடே ஸ்தம்பித்து போனது. இருப்பினும் தொடர்ச்சியாக மக்கள் குவிந்து வந்தனர். தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என அறிக்கை வெளிடப்பட்டது.
அதனை தொடர்ந்து, பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது பூத உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் இருந்து சென்னை தீவுத்திடலில் மாற்றப்பட்டது. அங்கேயும் மக்கள் கூட்டம் கட்டுகடங்காமல் வந்த வண்ணம் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என லட்சக்கணக்கானவர்கள் வருகை தருகின்றனர். நேரில் வர முடியாத பிரபலங்கள் சமூக வலைத்தளத்திலும் வீடியோ மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை முதல் நடிகர் ரஜினி, கமல், பாக்கியராஜ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் அரசியல் பிரமுகர்களும் தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, கேயம்பேட்டில் இருக்கும் தேமுதிக அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் பூத உடல் நல்லடக்கம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேமுதிக அலுவலகத்தில் இருக்கும் பார்க்கிங் பகுதியில் அதாவது கட்சி அலுவலகம் முன்பகுதியில், ஜேசிபி வாகனம் மூலம் குழு தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணியளவில், கேப்டன் விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்திற்கு இறுதி ஊர்வலமாக கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை 4.45 மணிக்கு அவரது பூத உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்லடக்க நிகழ்ச்சியின் போது 200 பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இறுதி சடங்கில் பொது மக்கள் அனுமதி இல்லை என்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோயம்பேடு பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்தின் பூத உடல் நல்லடக்கம் செய்யும் போது அவருக்கு முழு அரசு மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.