தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மருத்துவமனையில் தொடர்ந்து 3வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேமுதிக தலைவரும் நடிகர் சங்க முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் தொண்டை வலி. மார்பு சளி, இடைவிடாத இருமல் மற்றும் உடல்நலக் குறைவால் கடந்த சனிக்கிழமை சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக தேமுதிக வெளியிட்ட செய்தி குறிப்பில், ”தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாதாந்திர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர்கள் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும்வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.