தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளராக விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரகாகரன் நியமனம் செய்யப்படுவதாக தேமுதிக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேமுதிகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம்
தர்மபுரி பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச்சந்தை கே.வி மஹாலில், தேமுதிகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, கட்சிப்பணிகள், எதிர்கால திட்டங்கள், கட்சியின் முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
இளைஞர் அணிச் செயலாளர், பொருளாளர் குறித்து அறிவிப்பு
இந்த நிலையில், கூட்டத்தின்போது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளராக, விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தேமுதிக-வின் பொருளாளராக பிரேமலதாவின் சகோதரர் எல்.கே. சுதீஷ் நியமிக்கப்படுவதாகவும், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதேபோல், தேமுதிக அவைத் தலைவராக இளங்கோவனும், தலைமை நிலையச் செயலாளராக பார்த்தசாரதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே, நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது தேமுதிக தலைமை.
அதன்படி, தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளராக அழகாபுரம் மோகன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். துணைச் செயலாளர்களாக, எம்.ஆர். பன்னீர்செல்வம், SSS.U. சந்திரன், எஸ். செந்தில்குமார், ஆர். சுவா ரவி ஆகியோர் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு, தேமுதிக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு தந்து, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.