அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது. வரும் ஜூலை 10ஆம் தேதி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


அதிமுக வழியை பின்பற்றும் தேமுதிக: அந்த வகையில், திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார். இந்த சூழலில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் யார் களமிறங்குவார்கள்? என்பது பெரும் கேள்வியாக இருந்தது. ஆனால், இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு தொண்டர்களுக்கு ஷாக் அளித்தார்.


அதன் தொடர்ச்சியாக, மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தேமுதிகவும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், "2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது.


இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது. காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டும்.


"கேள்விக்குறியாக்கப்பட்ட ஜனநாயகம்" இன்றைய கால கட்டத்தில் ஆட்சியாளர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது. இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை.


எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இன்றைய ஆட்சியாளர்கள் கரங்களில் தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிக பெரிய கேள்விக்குறியக்கப்பட்டுள்ளது.


ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லி கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றக்கு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என்பதை ஒட்டு மொத்த மக்களும், கழகத்தினரும் அறிவர். எனவே, இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர்  உயிரிழந்தார்.


இதனை தொடர்ந்து எட்டாம் தேதி முதல் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக ஒரு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ ஆறு மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைதேர்தல் நடைபெற உள்ளது.