தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் 


தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி  வெளியூர்களில் தங்கியிருந்து வேலை செய்து வந்த தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், வெளியூர்களில் தங்கி படித்து வரும் மாணவர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் தீபாவளி விடுமுறை இன்றுடன் முடிந்ததையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற அனைவரும் தாங்கள் வேலை பார்த்து வரும் இடங்களுக்கு கார்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளில் திரும்பினர்.


இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து வந்ததால் விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. 


 



சென்னை திரும்பும் மக்கள்... அணிவகுத்து நிற்கும் வாகனகள்...


அலைமோதிய பயணிகள் கூட்டம்


இதனால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் தென்மாவட்டங்களில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கு சென்ற அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.


சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், எல்லீஸ்சத்திரம் பகுதியில் மேம்பால பணி நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிப்பதால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை காணப்படுகிறது. போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களை சீர் செய்து அனுப்பி வருகின்றனர்.


 



சென்னை திரும்பும் மக்கள்... அணிவகுத்து நிற்கும் வாகனகள்...


கூட்டேரிப்பட்டில் கடும் போக்குவரத்து பாதிப்பு


திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் மேம்பாலம் பணி நடைபெற்று வருவதால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றனர். மேலும்  இரவு முழுவதும் வாகனங்கள் செல்லும் என்பதால்  மாவட்ட காவல் துறை சார்பாக திருச்சி, சேலம், போன்ற பல்வேறு ஊர்களில்  இருந்தும்  சென்னைக்கு செல்லும் வாகனங்கள் திண்டிவனம் அடுத்த  கூட்டேரிப்பட்டுக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பாக  செண்டூர், மயிலம், வழியாகச் சென்று தென்கோடிப்பாக்கம்,  புதுவை தேசிய நெடுஞ்சாலை வழியாக திண்டிவனம் வந்து சென்னைக்கு செல்ல போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 



சென்னை திரும்பும் மக்கள்... அணிவகுத்து நிற்கும் வாகனகள்...


முக்கியமாக கனரக வாகனங்கள் அனைத்தும் இந்த பாதையை பயன்படுத்துமாறு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் முழுமை அடையாத கூட்டேரிப்பட்டு மேம்பாலம் வழியாக சிறிய வாகனங்களை மட்டும் குறைவான வேகத்தில் செல்லுமாறு  போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இன்று காலை 11 மணி முதல் 4 மணி வரை  30,000 இலகுரக வாகனங்கள் சென்று உள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.


 



சென்னை திரும்பும் மக்கள்... அணிவகுத்து நிற்கும் வாகனகள்...