இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊரை நோக்கி நேற்று முதல் புறப்பட்டனர். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பெரியளவில் கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகை பெரியளவில் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்தாண்டு திங்கள்கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது. வார இறுதி நாட்களுடன் வருவதால் அனைவரும் குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். தீபாவளிக்குச் சொந்த ஊர் திரும்புவோருக்கு உதவும் வகையில் 21.10.2022 முதல் 23.10.2022 வரை 3 நாட்களுக்குப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயங்குகிறது. இதனால் நேற்று மாலை முதலே கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோயில், பரனூர், விக்கரவாண்டி சுங்கச்சாவடி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. மிகவும் அதிகப்படியான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்லும் சூழல் உருவானது.
இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வழக்கமாக தினசரி 25 ஆயிரம் வகானங்கள் வரையில் செல்லும். ஆனால் நேற்று மாலை நிலவரப்படி 40 ஆயிரம் வாகனங்கள் வரைக்கும் தென்மாவட்டங்களை நோக்கி சென்றன. தற்போது 97 சதவீத வாகனங்கள் பாஸ்டேக் முறையில் சென்றதால், பெரும் நெரிசல் தவிர்க்கப்பட்டது இதற்கிடையே விழுப்புரம் மாவட்ட மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்திரவின் பேரில் போக்குவரத்து போலீசார், ரோந்து போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.