தமிழ்நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே தமிழ்நாட்டில் மக்கள் உற்சாகம் அடைந்துவிடுவார்கள். அதற்கு முக்கிய காரணம் பட்டாசும், புத்தாடையும் ஆகும்.
மழை அச்சம்:
ஆனால், வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து தீவிரம் அடைந்ததால் கடந்த சில நாட்களாவே மழையின் தாக்கம் தீவிரமாகவே இருந்து வந்தது. இந்த சூழலில், தீபாவளி நாளான இன்று காலையும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், காலையில் பலராலும் பட்டாசுகள் வெடிக்க இயலாமல் போனது. மழையின் தாக்கம் மாலையிலும், இரவிலும் இருக்குமா? என்றே பலரும் அச்சப்பட்டனர். சென்னைவாசிகள் தீபாவளி பண்டிகையையே கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
தீபாவளி கொண்டாட்டம்:
மாலை முதல் மழை இல்லாமல் வானம் தெளிவாக காணப்பட்டதால் சென்னைவாசிகள் நிம்மதியாக பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குழந்தைகள், பெற்றோர்கள் என குடும்பமாக இணைந்து பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வங்கக்கடலிலும், அரபிக்கடலிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ள நிலையில், புயல் அபாயமும் உண்டாகும் என்றே கருதப்படுகிறது. ஆனாலும், இன்று மழை பெய்யாததால் பலரும் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடினர். குறிப்பாக, சிறுவர்கள், சிறுமிகள் ஆர்வத்துடன் பட்டாசுகளை வெடித்தனர்.
காற்று மாசு:
அதேசமயம், பகலில் மழையின் தாக்கம் சிறிதளவு இருந்ததால் சரியாக பட்டாசுகளை வெடிக்க இயலாததால் மாலை முதல் பட்டாசுகளை அதிகளவில் வெடித்து வருகின்றனர். இதனால், காற்று மாசு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் காற்று மாசு மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர். பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட புகைமூட்டம் சாலையை மறைத்தது.
புதியதாக திருமணமான ஜோடிகள் தங்களது தலை தீபாவளியை பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகாலை முதலே இறைச்சி விற்பனை படுஜோராக நடந்தது. இன்று மட்டும் தமிழ்நாட்டில் பல கோடி மதிப்பில் இறைச்சி விற்பனை நடந்தது.
சென்னையில் பட்டாசு விற்பனை மிகப்பெரிய அளவு நடைபெற்றுள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை முதல் மழையின் தாக்கம் இல்லாததால் பலரும் உற்சாகமாக பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடினர்.