தமிழ்நாட்டில் விசேஷ நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை என்றால் வெளியூர்களில் வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் ஆகும். குறிப்பாக, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு வெளியூர்வாசிகள் அதிகம் வசிக்கும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் போன்ற நகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.



சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்:


குறிப்பாக, கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் சென்னையில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு இன்று சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதன்படி சென்னையில் இருந்து வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் 6 ஆயிரத்து 276 பேருந்துகளுடன் கூடுதலாக 4 ஆயிரத்து 900 பேருந்துகள் என 11 ஆயிரத்து 176 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  


எங்கிருந்து எந்த ஊர்களுக்கு?


சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை. கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.


கோயம்பேடு:


கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்


மாதவரம்:


பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.


அதேபோல, வாகன நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து (OMR) திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


சென்னையில் இருந்து வரும் தீபாவளிக்கு 5 லட்சம் மக்கள் அளவிற்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.