தமிழ்நாடு முழுதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளியை கொண்டாடினார்கள். தமிழ்நாட்டில் பொதுவாக விழாக்காலங்கள் என்றால் வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள்:


இதையடுத்து, நடப்பு தீபாவளி பண்டிகைக்காகவும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். சென்னையில் இருந்து மட்டும் பேருந்துகள், ரயில்கள், தனிப்பட்ட வாகனங்கள் மூலமாக சுமார் 15 லட்சம் மக்கள் வரை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தீபாவளி பண்டிகைக்காக கடந்த திங்கள்கிழமை முதல் இயக்கப்பட்ட அரசு பேருந்துகளில் 5.76 லட்சம் மக்கள் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை, திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு மீண்டும் திரும்பும் மக்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சுமார் 13 ஆயிரம் பேருந்துகள்:


இன்று , நாளை மற்றும் நாளை மறுநாள் என வரும் 3 நாட்களுக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இ்யக்கப்பட உள்ளது. இந்த 3 நாட்களில் தினசரி வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் 3 ஆயிரத்து 165 சிறப்பு பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, மற்ற ஊர்களுக்கு 3 ஆயிரத்து 405 சிறப்பு பேருந்துகள் அடுத்த 3 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. மொத்தமாக அடுத்த 3 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளையும் சேர்த்து 12 ஆயிரத்து 846 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.


அரசின் சிறப்பு பேருந்துகளுக்கான இருக்கைகள் பெரும்பாலும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க முன்பதிவு செய்து கொள்ளுமாறு அரசு போக்குவரத்துக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


தனியார் பேருந்துகள் கட்டணம் உயர்வு:


தீபாவளி பண்டிகைக்காக அரசு சென்னையில் இருந்து இயக்கிய சிறப்பு பேருந்துகள் மூலமாக கடந்த திங்கள்கிழமை முதல் கடந்த புதன்கிழமை லட்சக்கணக்கான மக்கள் வெளியூர்களுக்குச் சென்றுள்ள நிலையில், ரயில்களிலும் 7 லட்சம் மக்கள் வரை பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.


அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகளும் இன்று முதல் சென்னையை நோக்கி படையெடுக்க உள்ளது. தீபாவளி முடிந்து சொந்த ஊர் திரும்புவதால் தனியார் பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னையில் இன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போதிய முன்னேற்பாடுகளையும் போக்குவரத்து போலீசார் செய்துள்ளனர்.