இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி மிக மிக முக்கியமான பண்டிகை ஆகும். தமிழ்நாட்டிலும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கல்விக்காகவும், வேலைக்காகவும் சொந்த ஊர்களில் இருந்து வெளியூர்களில் தங்கியிருக்கும் மாணவர்களும், இளைஞர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம்.


இன்று முதல் சிறப்பு பேருந்துகள்:


குறிப்பாக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.


இதையடுத்து, இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இன்று முதல் வரும் 30ம் தேதி வரை தீபாவளி பண்டிகைக்காக சுமார் 14 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து மட்டும் அடுத்த 3 நாட்களுக்கு 11 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


சென்னையில் இருந்து இத்தனை பேருந்துகளா?


சென்னையில் இருந்து இன்று முதல் தினசரி வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளாக மட்டும் 4 ஆயிரத்து 900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 700 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  தமிழ்நாட்டின் மற்ற ஊர்களில் இருந்து 330 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


சென்னையில் இருந்து நாளை வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் 2 ஆயிரத்து 125 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மற்ற ஊர்களில் இருந்து நாளை 1,130 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளான நாளை மறுநாள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2 ஆயிரத்து 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


3 இடங்களில் ஏற்பாடுகள்:


சென்னையில் பேருந்துகள் 3 இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, நெல்லை, செங்கோட்டை, திருச்செந்தூர், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், ராமேஸ்வரம், கோயம்புத்தூர் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்பட உள்ளது.  கோயம்பேட்டில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், பெங்களூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஊர்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மாதவரத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.