Diwali 2023: தீபாவளி பண்டிகையன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் தரப்பில் அறிவிக்கபட்டுள்ளது.
தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடந்த 2018, ஆண்டே உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தீபாவளி வரும் 12ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால் இப்பொழுதில் இருந்தே பட்டாசு விற்பனை தீவிரமடைந்து வருகிறது. தீபாவளி நெருங்கி வருவதால், பட்டாசு வெடிப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும், கட்டுப்பாடுக விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என தமிழ சுற்றுச்சூழல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தீபாவளி நாளில் காற்றின் தரம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டாசு வெடிக்கும் போது யாருக்காவது தீவிபத்து காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை பணியாளர்கள் தயாராக இருக்கவும், பணியில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளியன்று மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னதாக தீபாவளிக்கு சரவெடி மற்றும் பேரியம் மூலப்பொருளில் தயாராகும் பட்டாசுகளுக்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீதான விசாரணையில் சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம் என்றும், அதுவும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம் என்ற உத்தரவு நீடித்து வருவதால், கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.