Diwali 2023 Bonus:கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 

வரும் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு சங்கத்தில் வேலைபார்க்கும் பணியாளர்களுக்கு 2022-2023ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் 2023-2024ம் ஆண்டுக்கான கருணை தொகை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.  இது தொடர்பான வெளியான அரசாணையில், ”போனஸ் சட்டத்தில் கீழ் வரும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு சென்ற ஆண்டை போலவே அவர்களுடைய சம்பளத்தில் 10 சதவீத போனஸ்( போனஸ் மற்றும் கருணை தொகை ) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

 

போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு மூவாயிரம் ரூபாயும், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு 2400 ரூபாயும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணை தொகையாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள தலைமை கூட்டுறவு சங்கங்கள், மத்திய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 44,270 பணியாளர்களுக்கு ரூ.28.1 கோடி போனஸ் மற்றும் கருணை தொகையாக வழங்கப்பட உள்ளது” என்றும் அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

 





முன்னதாக கடந்த வாரம் அரசு பணியில் சி மற்றும் டி பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என்றும், நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.