தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, தீபாவளி வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது.


அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, தீபாவளி வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


“ வரும் அக்டோபர் 24-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்களுக் பாதுகாப்பு வழங்கவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடவும் கீழ்க்காணும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.



  • உச்சநீதிமன்ற உத்தரவிற்கிணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருள்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும்.

  • உச்சநீதிமன்ற உத்தரவிற்கிணங்க பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதால் இந்த குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும்.

  • சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 80-ன்படி, பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. மேலும், தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ பயன்படுத்துவதோ( வெடிப்பதோ) கூடாது.

  • எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட எரிபொருள் கிடங்குகள் அருகே பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.

  • பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்கக்கூடாது.

  • குடிசைகள், ஓலைக்கூரைகள் உள்ள இடங்களில் வான வெடிகளையோ, எந்தவித பட்டாசு வகைகளையோ கொளுத்தக்கூடாது.

  • பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்களில் பாதுகாப்பு உபகரஙணங்கள் மற்றும் தீ தடுப்பு உபகரணங்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

  • மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம் மற்றும் வழிபாட்டு தலங்களில் ( ஒலி எழுப்ப தடை செய்யப்பட்ட இடங்கள்) பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.

  • பட்டாசு விற்கும் கடைகள் அருகே புகைப்பிடிப்பதோ, புகைத்த சிகரெட் துண்டுகளை வீசி எறிவதோ கூடாது.

  • பட்டாசுகளை வெடிப்பதற்கு நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துக்களை தவிர்க்கவும்.

  • கால்நடைகளை அருகே பட்டாசு வெடித்தால் அவைகள் மிரண்டு சாலையில் செல்பவரை தாக்கி விபத்துக்களை ஏற்படுத்தலாம். ஆதலால், கால்நடைகள் இருக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்கக்கூடாது.

  • விதிமுறைகளை மீறி அனைத்து பட்டாசுக்கடை, உரிமமின்றி பட்டாசு விற்பனை செய்தால் அல்லது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்தால் அல்லது அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

  • பொதுமக்கள் அதிகமாக கூடுகிற பேருந்து நிலையங்கள் மற்றும் கடை வீதிகளில் தகுந்த குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் உடைமைகள் விழிப்போடு பாதுகாக்க வேண்டும்.

  • பட்டாசு பொருள்கள் பேருந்து, இரு சக்கர வாகனம், ரயில் போன்றவற்றில் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.

  • நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டும். அதிவேகமாக செல்வதை அறிந்து விபத்தின்றி பயணம் செய்ய வேண்டும்.

  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களாக கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

  • பட்டாசு மூலம் அல்லது வேறு ஏதேனும் விபத்து நேர்ந்தால் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அவசர உதவி எண் 100 மற்றும் 112 அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் 108 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ள பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து குற்றங்கள் இல்லாத விபத்தில்லாத தீபாவளியை உறுதி செய்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் இந்த தீபாவளியை கொண்டாடிட அனைத்து பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். “


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.