சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆணையர் பிரதாப் குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் உரிய பதில்களை அளிக்கப்படாத மனுக்கள் மீதான விசாரணை இன்றைய தினம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் அரசு அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் மனுதாரர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மாநில தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆணையர் பிரதாப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


அப்போது அவர் பேசியது, "மாநில தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு வரும் மனுக்களை அந்தந்த மாவட்டத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றோம். 



சேலம் மாவட்டத்தில் 60 மனுக்கள் மீது இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. இதுவரை விசாரித்த மனுக்களில் தவறான பதிலளித்த வருவாய் துறையை சேர்ந்த இரண்டு பொது தகவல் அலுவலர்களுக்கு தலா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் சராசரியாக ஆயிரம் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் 20 முதல் 30 சதவிகித பொது அலுவலர் தண்டனைக்கு உள்ளாகிறார்கள்.


ஊரக வளர்ச்சி வருவாய்த்துறை ஆகியவற்றிலிருந்து அதிகப்படியான மேல்முறையீடு மனுக்கள் வருகிறது. வருவாய்த்துறையில் ஆவணங்களை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். சுதந்திர இந்தியாவிற்கு முன்பான ஆவணங்களைக் கூட மனுதாரர்கள் கேட்கின்றனர். இதனால் வருவாய் துறையில் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக ஆவணப்படுத்த வேண்டும் என அரசுக்கு பரிந்துரையாக முன் வைத்துள்ளோம் என்றார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மொத்தம் 28 சட்டப்பிரிவுகள் மட்டுமே உள்ளது. அதில் இரண்டு மூன்று சட்டப்பிரிவுகள் தெரிந்திருந்தாலே சரியான கேள்விகளை கேட்டு மனுதாரர்கள் பதில் பெற முடியும். 



அதனால் மனுதாரர்கள் தெளிவான கேள்விகளை கேட்க வேண்டும் எனவும் கூறினார். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் அதிகாரிகளை துன்புறுத்தும் வகையில் கேள்விகளை கேட்கின்றனர். அவர்கள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனைத்து துறைகளிலும் தினசரி 500 க்கும் மேற்பட்டவர்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்கின்றனர். இதில் சரியாக வகையில் பதிலளிக்காத அலுவலர்கள் மீது புகார் மனு அளிக்கின்றனர். அவற்றை பரிந்துரை செய்து விசாரணை நடத்த அவர்களுக்கு மீண்டும் அந்த புகார் மனு அனுப்பப்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத சூழ்நிலை வருகிறது. எனவே மாநில, மாவட்ட அளவில் பொது தகவல் அலுவலர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.