கரூரில்  3 வயது சிறுமி மாதங்கி ஸ்ரீ, ஸ்கேட்டிங்கில் உலக சாதனை- ஏற்கனவே 1 மணி நேரம் உலக சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது  5 மணி நேரம் இடைவிடாமல் உலக சாதனை புரிந்தார். நோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கினர்.


 




கரூரை சேர்ந்த கருப்பையா மற்றும் லதா தம்பதியினரின் மகள் மாதங்கி ஸ்ரீ. 3 வயதிலேயே ஸ்கேட்டிங்கில் திறன் பெற்று விளங்கியதால் இதில் உலக சாதனை நிகழ்த்த பெற்றோர்கள் விரும்பினர். இதனை அடுத்து  கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு 1 மணி நேரம் முழுவதும் இடைவிடாமல் ஸ்கேட்டிங் செய்த முதல் 3 வயது சிறுமி என உலக சாதனை படைத்திருந்தார். இந்த உலக சாதனையில் மொத்தம் 90 சுற்றுகளின் மூலம் 6.5 கிலோ மீட்டர் இடைவிடாமல் ஸ்கேட்டிங் செய்து இச் சிறுமி சாதனை படைத்திருந்தார். 


 




இந்த நிலையில், இன்று  (29.05.2022)  மாலை 4 மணிக்கு தொடர்ந்து ஐந்து மணி நேரம் ஸ்கேட்டிங்கில் உலக சாதனை புரியும் இலக்கை நிர்ணயித்து தொடங்கினார். இரவு 9 மணி வரை இடைவிடாமல் தொடர்ந்து ஐந்து மணி நேரத்தில் 365 சுற்றுகள், 26.5 கி.மீ தூரத்தை கடந்து, உலக சாதனை புரிந்து  3 வயது சிறுமி மாதங்கிஸ்ரீ பொதுமக்களிடமிருந்து பாராட்டுக்களை பெற்றுள்ளார். இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சான்றிதழ்களை வழங்கிய நடுவர்கள் இந்த வயதில் இவ்வாறான சாதனையை முறியடிக்க முடியாது என்று கூறினர்.


 




5 மணி நேரம் உலக சாதனைக்காக ஸ்கேட்டிங் போட்டியில் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் இந்தியன் சிஇஓ, அரவிந்த், தேசிய தொழில்நுட்ப இயக்குனர் & nwr இன் தேசிய நீதிபதி லாவனியா ,மற்றும் நேஷனல் நடுவர், ரஞ்சித் ஆகியோர் அங்கீகரித்து சாதனை சான்றிதழை வழங்கினர். உலக சாதனை படைத்த மாதங்கி ஸ்ரீயை பெற்றோர் ஆனந்த கண்ணீரில் கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


 





கரூரைச் சேர்ந்த 3 வயது சிறுமி தற்போது 5 மணிநேர ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டு உலக சாதனை படைத்துள்ளார் . இந்த சாதனையை இதற்கு முன்பாக 52 நபர்கள் இணைந்து 5 மணிநேர சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்நிலையில்  3 வயது சிறுமி ஸ்கேட்டிங் உலக சாதனை குறித்து அவரது பெற்றோர்கள் தெரிவிக்கும்போது - எனது மகள் விரைவில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு தங்க பதக்கம் வாங்கித் தருவதே எங்களின் லட்சியம் என தெரிவித்தார் .


3 வயது சிறுமி ஸ்கேட்டிங் போட்டிகள் தற்போது இமாலய சாதனை குறித்து சிறுமியின் பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர், உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சமூக  வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.