கனமழை காரணமாக கூடலூர், வால்பாறை, பந்தலூர் தாலுகாவில் கல்வி நிலையங்களுக்கு  இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள்  உத்தரவிட்டுள்ளனர். 


கோவையில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் மு.அருணா அறிவித்துள்ளார். மேலும் இன்றும் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


இதனிடையே கோவை சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிக்கு செல்ல இன்று சுற்றுலா பணிகளுக்கு  வனத்துறை தடை விதித்துள்ளது. அதேசமயம் தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் கணித்துள்ளதுபடி, நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவலா, பந்தலூர் மற்றும் அவலாஞ்சி, மேல்பவானி, வால்பாறை ஆகிய இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.


மேலும் கன்னியாகுமரி,  மாஞ்சோலை, தென்காசியிலும் கனமழை பெய்யும். கேரளாவை பொறுத்தவரை கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், கண்ணூர், திருச்சூர், வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் அவர் கணித்துள்ளார். அதேபோல் மூணாறு, பத்தினாம் திட்டாவில் நாளை மறுநாள் வரை மழை தொடரும் எனவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோவை மாவட்டம் சின்னகல்லாறில் கடந்த 24 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை பெய்துள்ளதாகவும், சின்கோனாவில் 15 செ.மீ, சோலையாறில் 12 செ.மீ., வால்பாறையில் 11 செ.மீ., மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.