கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 74 வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.


 




சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று சிறப்பாக பணியாற்றிய அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருது வழங்கும் நிகழ்வு நாடு முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெறும் ஒன்றாகும்.  இந்த விருதிற்காக ஒவ்வொரு துறையின் தலைமை அலுவலரிடம் பரிந்துரை பட்டியல் காரணத்துடன் பெறப்பட்டு அதிலிருந்து இறுதி பட்டியல் தேர்வு செய்யப்படுகிறது. இந்தாண்டு 74 வது குடியரசு தினத்தன்று கரூர் மாவட்டத்தில் 387 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பொதுவாக இவ்விருதுகள் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கடைநிலை அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பபட்டு வருகிறது. இந்த அங்கீகாரம் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.


 


 




அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர், கிராம உதவியாளர், தூய்மை காவலர், மேல்நிலை தொட்டி பராமரிப்பாளர், சத்துணவு சமையலர், அங்கன்வாடி உதவியாளர், கால்நடை உதவியாளர், மின்சார வாரிய லைன்மேன், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என பல்வேறு தரப்பினருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. மேலும், தன்னார்வ அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும், சமுதாயத்திற்கு தொண்டாற்றிய சிறந்த நபர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.


 




இந்நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. அத்துறையை சார்ந்த பணியாளர்களுக்கு விருது வழங்குவது இது முதல் முறை அல்ல. பல ஆண்டுகளாக இது நடைமுறையில் உள்ளது. மேலும், பாராட்டு சான்றிதழில் இடம்பெற்ற சொற்கள் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட நடையிலேயே தயாரிக்கப்பட்டு, பின்னர் இறுதியாக இந்தாண்டு வழங்கப்பட்ட சான்றிதழ் அவர்கள் விரிவான பணியை பாராட்டும் நடையில் இடம்பெற்றது.


 




போலி மதுபான விற்பனையை தடுப்பது, கலப்பட மதுபான விற்பனையை தடுப்பது, அரசு விதிகளைப் பின்பற்றுவது போன்றவை அவர்களுடைய பணிகளின் ஒரு பகுதியாகும். இந்த பணிகளை சிறப்பாக மேற்கொள்வோரை பாராட்டுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதே உண்மை. இந்நிலையில், சான்று பெற்ற டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தாங்கள் இழிவான தொழில் செய்வது போன்று எழுந்த விமர்சனங்களால் மிகுந்த மன வேதனையில் உள்ளதாக தெரிகிறது. இதை அனைவரும் கருத்தில் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


 




வரும் காலங்களில் இது போன்ற நுட்பமான மற்றும் உணர்வு பூர்வமான விஷயங்கள் கவனமுடன் கையாளப்படும். இறுதியாக டாஸ்மாக் அலுவலர்களுக்கு விருது வழங்குவது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்று மீண்டும் ஒரு முறை இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்துள்ளார்.