இந்த ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பளிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் பாலமேட்டைச் சேர்ந்த அழகு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," பொங்கல் விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றவை. ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் தேதி பாரம்பரிய முறையில் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறும்.
இந்த விழாவை வழக்கமாக கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டியினரே ஒருங்கிணைத்து நடத்துவர். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை நீதிமன்றம் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அனைத்து சமூக மக்களும் சமமாக பங்கெடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஊர் முக்கியஸ்தர்கள் நீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்கவில்லை.
ஜல்லிக்கட்டு விழா குழுவில் இதுவரை ஆதிதிராவிட மக்களுக்கு குறிப்பாக பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆகவே இந்த ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பளிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா வேல்முருகன் அமர்வு, மனுதாரர் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.