பேராசிரியர் நூற்றாண்டினை கழகத்தின் தலைமை முதல் ஒவ்வொரு கிளை வரையிலும் கொண்டாடுவோம். அவர் ஊட்டிய இயக்க உணர்வை நிலைநாட்டிடுவோம் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின்   தொடர்களுக்கு மடல் எழுதியுள்ளார். 


அந்த மடலில்,  


"நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.


‘அண்ணா’ என்பது உறவுச் சொல். ஆனால், எவ்விதத்திலும் அவருக்கு இரத்த உறவாக இல்லாத கோடிக்கணக்கான தமிழர்களும் ‘அண்ணா’ என்றே பேரறிஞர் பெருந்தகை அண்ணாவை அழைத்தனர். ‘கலைஞர்’ என்பது ஒருவரின் தனித்திறமையைக் குறிக்கும் பொதுவான சொல். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு, ‘கலைஞர்’ என்றால் முத்தமிழறிஞர் கலைஞர் ஒருவர்தான். ‘பேராசிரியர்’ என்பது கல்விப் பணி சார்ந்த சொல். ஆனால், நம் இயக்கத்தினருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் 'பேராசிரியர்' என்றால் நினைவுக்கு வருபவர் இனமானப் பேராசிரியர் ஒருவர்தான். அவருடைய நூற்றாண்டு தொடக்க விழா, நாளை (டிசம்பர் 19).


எளிமையும் உறுதியும் பேராசிரியரின் அடையாளங்கள். தன்னைப் பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட, தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதையே அவர் எப்போதும் விரும்பினார்; கடைப்பிடித்தார். 


தான் உணர்ந்ததை உணர்ந்தவாறு உரைக்கும் பேராசிரியப் பெருந்தகை, “தந்தை பெரியாரிடத்தில் ஓர் இளைஞனாக - தொண்டனாகச் சேர்ந்தவனாக, பேரறிஞர் அண்ணாவிடத்திலே பயிற்சி பெற்றவனாக உருக்கொண்ட அன்பழகனின் உருவமும் உணர்வும் மாறவில்லை என்பதிலேதான் நான் பெருமைப்படுவேன். என் உருவம் அதிகம் மாறியதே இல்லை. அது என்னுடைய இயற்கை. என் குணமும் அதிகமாக மாறியது இல்லை. ஆனால், மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பண்பு ஏற்பட்டிருக்கிறது. அது எனக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. ஆனால் அடிப்படையில் என்றைக்கும் நான் தடுமாறவில்லை. அதிலே எனக்கு மகிழ்ச்சி.  என் கொள்கையிலே மாற்றமில்லை. தெளிவுதான் ஏற்பட்டிருக்கிறது. எதிரிகளுக்கு வேண்டுமானால் அது புரியாது. ஆனால், இன்னும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். என்னை, என் கருத்தை மாற்றக்கூடியவர் எவரும் இந்த உலகத்தில் இல்லை. நான் உளமார விரும்பிக் கலைஞரோடு இருக்கிறேனே தவிர, கலைஞர் விரும்பியதால் நான் அவரோடு இருக்கிறேன் என்பதைக்கூட ஒப்புக்கொள்ள மாட்டேன். அவர் விரும்புகிறார் என்பதிலே எனக்குச் சந்தேகமில்லை. என்னை விட்டு, அவர் வேறு யாரைத்தான் விரும்புவார்? கழகத் தோழர்கள் பலர் கலைஞரின் காதோடு முகம் வைத்துப் பேசியவர்கள். இன்னும் எனக்கு அந்தக் கலையைச் சொல்லித் தராதவர்கள். கழகத்தை விட்டு அவர்கள் போய்விடுவார்களேயானால் எனக்கு அதுபற்றிக் கவலை இல்லை. எனது கொள்கையைக் காக்கும் கழகமே எனக்கு முக்கியம்” என்று முழங்கியிருக்கிறார். முழங்கியபடியே வாழ்ந்திருக்கிறார்.




 


சமூகநீதியை - தமிழ்மொழியை - தமிழினத்தைக் காக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தத்துவப் பேராசானாக விளங்கியவர் இனமானப் பேராசிரியர். கழகத்தின் தலைவராக அரை நூற்றாண்டுகாலம் தலைவர் கலைஞர் பொறுப்பு வகித்து வரலாற்றுச் சாதனை படைத்தார் என்றால், ஏறத்தாழ அதே அதே கால அளவுக்கு கழகத்தின் பொதுச்செயலாளராகக் கொள்கை முழக்கம் செய்தவர் பேராசிரியர் பெருந்தகை . முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைவிட பேராசிரியர், வயதில் சற்று மூத்தவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு, பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு அண்ணனாக, தோள் கொடுக்கும் தோழனாக, சுமைகளைப் பகிர்ந்து கொள்ளும் இயக்கத்தின் பொதுச்செயலாளராகப் பேராசிரியர் விளங்கினார்.


பொதுவுடைமை இயக்கத்தில் காரல் மார்க்ஸ் - ஃப்ரெட்ரிக் ஏங்கெல்ஸ் நட்பை வரலாறு உரக்கச் சொல்கிறது. திராவிட இயக்கத்தில் கலைஞர் - பேராசிரியர் நட்பு கொள்கை உறவுக்கான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. திருவாரூரிலே இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய சிக்கந்தர் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், தன்னுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவரையும் அழைத்து வந்தார். பேரறிஞர் அண்ணாவுடன் வந்த அந்த மாணவரை, திருவாரூரில் படித்து வந்த பள்ளி மாணவரான கலைஞரும் காண்கிறார். அந்தப் பல்கலைக்கழகத்து மாணவர்தான், நம் இனமானப் பேராசிரியர். அன்று கிடைத்த அறிமுகம், அதன்பிறகான நட்பு, இறுதிவரை மாறாத கொள்கைப் பயணம் என இருவரும் காட்டிய அன்பு, இலக்கியத்திற்கு ஈடானது! 




முத்தமிழறிஞர் கலைஞர் தன் நண்பரை – அண்ணனை - தோழரை எப்படிப் பார்க்கிறார் என்பதை அவரது சொற்களிலேயே கேட்டால் தனி சுகமல்லவா? 


“பள்ளி மாணவனாகத் திருவாரூரில் ‘தமிழ்நாடு மாணவர் மன்றம்’ என்ற ஒரு மாணவர் அமைப்பினைத் தொடங்கினேன். சேலம், ராசிபுரம் போன்ற ஊர்களில் அதற்குக் கிளைகளும் அமைந்தன. அப்போது நாட்டில் ஏற்பட்டிருந்த இந்தி எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கங்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு உணர்ச்சியும் எழுச்சியும் ஊட்டிடத்தக்க விதத்தில் இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது. இதனுடைய முதலாவது ஆண்டு விழாவினை 1942-ஆம் ஆண்டு திருவாரூரில் நடத்தினேன். முக்கியச் சொற்பொழிவாளராக அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே எம்.ஏ., வகுப்பு மாணவராயிருந்த ஒருவரை அழைத்திருந்தேன். ஒல்லியான -மெலிந்த உருவம் என்றாலும் துல்லியமான செந்தமிழ்ப் பேச்சு, அணை உடைத்த வெள்ளமெனத் தடைப்படா அருவி நடை, தன்மானக் கருத்துகள், தமிழ் முழக்கம் இவைகளால் எங்களையெல்லாம் ஈர்த்துத் தன்வயமாக்கிக் கொண்டார் அந்தச் சொற்பொழிவாளர். அவர்தாம் பேராசிரியர் அன்பழகன் அவர்கள். என்னைவிட ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளே மூத்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றாலும், பின்னர், அண்ணாவின் பல்கலைக்கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டு, கல்லிலும் முள்ளிலும் நடந்து, அல்லும் பகலும் சுற்றிச் சுழன்று, கண்ணீரும் செந்நீரும் சிந்தி இந்தக் கழகத்தை வளர்த்த பெருந்தொண்டர்களின் வரிசையில் அவருக்குச் சிறப்பான இடமுண்டு என்பதனை நாடு நன்கறியும். நெஞ்சத்தில் தோன்றும் கருத்துகளை அஞ்சாமல் எடுத்துரைத்து, யாரிடம் பேசுகிறோம் -அவர்கள் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றியே கவலைப்படாமல் தயவுதாட்சண்யமின்றி எடுத்துரைப்பதில் அவர் தனித்தன்மைக் கொண்டவர்” எனச் சொற்சித்திரம் வரைந்து காட்டியிருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர்.




 


சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இனமானப் பேராசிரியர் ஆற்றிய பணிகள் அனைத்திலும் துணிவும் தெளிவும் வெளிப்பட்டே வந்தன. மக்கள் நல்வாழ்வுத்துறை, கல்வித்துறை, நிதித்துறை என அவர் பொறுப்பு வகித்த பொறுப்புகள் அனைத்தும் அவரது சிந்தனையாலும் திட்டங்களாலும் பெருமை பெற்றன. எல்லாவற்றிலும் கழகத்தின் கொள்கைகளையே அவர் முன்னிறுத்திச் செயல்பட்டார்.


ஈழத்தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்து, தலைவர் கலைஞர் தனது சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியபோது, பொதுச்செயலாளரான இனமானப் பேராசிரியர்  தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகி, உற்ற தோழன் - உடன்பிறவா அண்ணன் என்பதை உறுதிப்படுத்தினார்.


கலைஞருக்கு அண்ணனாக விளங்கிய பேராசிரியப் பெருந்தகை அவர்கள் எனக்கு பெரியப்பாவாக இருந்து பொதுவாழ்வில் தொடர்ந்து வழிகாட்டியவர். இளைஞரணி தொடங்கப்பட்டபோது அதன் தேவையை உணர்ந்து, வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கியவர். அதுமட்டுமின்றி, கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் கழக அலுவலகமான அன்பகம் கட்டடத்தைப் பெறும் முனைப்பில் இருந்த இளைஞரணி உள்ளிட்ட துணை அமைப்புகளுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கினார்.


பேராசிரியர் வைத்த தேர்வில் பங்கேற்ற மாணவனான நான், இளைஞரணிக்கு அன்பகம் கட்டடத்தைச் சொந்தமாக்க வேண்டும் எனத் தமிழ்நாடு முழுவதும் பயணித்து, இளைஞர்களைச் சந்தித்து, கிராமங்களில் கழகக் கொடியேற்றி, படிப்பகங்களைத் திறந்து வைத்து, தோழர்களுடன் தேநீர் அருந்தி நிதி வசூல் செய்து, பேராசிரியர் நிர்ணயித்த தொகையைவிட கூடுதலாக வழங்கினோம். அவர் நடத்திய அந்தச் செயல்முறைத் தேர்வில் பெற்ற வெற்றியின் அடையாளமாக இன்றும் இளைஞரணி அலுவலகமாகப் பொலிவுடன் விளங்குகிறது அன்பகம். 


இளைஞரணிச் செயலாளர் பொறுப்பினைத் தொடர்ந்து கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக, பொருளாளராக, செயல் தலைவராகப் பொறுப்புகளை நான் சுமந்தபோது பேராசிரியர் பெருந்தகை எனக்கு வழங்கிய ஆலோசனைகள் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்திடுவதற்கு உறுதுணையாக இருந்தன. சட்டமன்ற உறுப்பினராக, சென்னை மாநகராட்சி மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த காலங்களில் சட்டமன்றத்தில் பேராசிரியர்  செயல்படுகின்ற பண்பான முறையினை உற்றுநோக்கி - உள்வாங்கி என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறேன். முனைப்பான உழைப்பால் எதையும் அடைய முடியும் என்கிற உறுதியையும், அதற்குரிய பருவம்வரை காத்திருக்க வேண்டும் என்ற பண்பையும் அவரிடமிருந்து பெற்றிருக்கிறேன்.





 


பேராசிரியர் எனும் பெயருக்கேற்ப கழகத்தினருக்கு கொள்கைப் பாடம் நடத்தியவர் நம் இனமானப் பேராசிரியர். கழகப் பொதுக்கூட்டங்களில், மாநாடுகளில், கருத்தரங்குகளில் அவரது உரைகள் ஒவ்வொன்றும் திராவிட இயக்கத்துக் கொள்கைகளை எளிமையான முறையில் விளக்கி, வாழ்நாள் முழுவதும் மனதில் பதிந்திருக்கச் செய்யும் ஆற்றல் கொண்டவை. பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, தமிழ் மொழியின் வளம், தமிழர் வரலாற்றுப் பெருமை அனைத்தையும் உள்ளடக்கிய பேராசிரியப் பெருந்தகையின் சொற்பொழிவுகளைத் திராவிடத் தத்துவக் களஞ்சியம் எனலாம். தலைமுறை கடந்து இயக்கம் நிலைப்பதற்கும், கொள்கை தழைப்பதற்கும் பேராசிரியரின் உரைவீச்சு மகத்தான பங்காற்றியது.


நடமாடும் அறிவுக் கருவூலமாக, நூலகமாகத் திகழ்ந்தவர் இனமானப் பேராசிரியர். கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில், பல்லாயிரக்கணக்கான நூல்களுடன் அமைக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், ‘பேராசிரியர் ஆய்வு நூலகம்’ எனப் பெயர் சூட்டியிருப்பதிலிருந்தே இதனை உணர்ந்து கொள்ளலாம்.


தமிழ்மொழிக்கும் பண்பாட்டுக்கும் சிறப்பு சேர்க்கும் 40-க்கும் அதிகமான நூல்களைப் பலவற்றைப் படைத்தளித்தவர் பேராசிரியர். ‘தமிழர் திருமணமும் இனமானமும்’ என்கிற அவரது நூல் சுயமரியாதைத் திருமணத்தின் தேவையை தமிழின வரலாற்றுப் பார்வையுடன் விளக்கக்கூடியதாகும். ‘இவர்தாம் பெரியார்‘, ‘மாமனிதர் அண்ணா‘, ‘திராவிட இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்‘ எனப் பேராசிரியர் படைத்தளித்த நூல்கள் ஒவ்வொன்றும் அறிவுச் சுரங்கம். அதில், ‘கழகமும் கலைஞரும்’ என்ற நூலினை இளைஞரணி சார்பில் வெளியிடும் வாய்ப்பு அமைந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். 


இன்று, பேராசிரியரின் நூற்றாண்டைக் கொண்டாடும் பொறுப்பும் வாய்த்திருப்பதை எண்ணி மகிழும் அதே வேளையில், தனது நூற்றாண்டு விழாவைக் காண அவர் நம்மிடையே இல்லாமல், இரண்டாண்டுகளுக்கு முன் விடைபெற்றுவிட்டாரே என்ற ஏக்கமும் எழுகிறது. முத்தமிழறிஞர் கலைஞரும் இனமானப் பேராசிரியரும் உடலால் நம்மிடையே இல்லை என்றாலும் உணர்விலும் - ஒவ்வொரு அணுவிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் விரும்பிய திராவிடக் கொள்கை வழி அரசை நடத்தும் இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. ஒவ்வொரு தமிழரின் நலனையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் இலக்காகக் கொண்ட கழக அரசின் செயல்திட்டங்கள் ஒவ்வொன்றும் பேராசிரியர் நமக்கு நடத்திய கொள்கைப் பாடத்தின் பெருமையைச் சொல்லும்.


பேராசிரியர் நூற்றாண்டினை கழகத்தின் தலைமை முதல் ஒவ்வொரு கிளை வரையிலும் கொண்டாடுவோம். அவர் ஊட்டிய இயக்க உணர்வை நிலைநாட்டிடுவோம். கொள்கைச் சூரியனாய் எந்நாளும் ஒளிவீசும் இனமானப் பேராசிரியர் புகழை முரசொலிப்போம். இனமான உணர்ச்சியைப் பெறுவோம். அவர் வழி நடப்போம்.


இவ்வாறு, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது மடலில் தெரிவித்துளாளர்.