கொரோனாவும், ஒமிக்ரானும் தீவிரமாக பரவினாலும் கட்டுப்பாடுகளுடன் பொங்கல் பண்டிகை சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதேசமயம், பொங்கல் கொண்டாட்டத்தில் சாதிய கொடுமையும் அரங்கேறியுள்ளது. அப்படி இயக்குநர் சேரனின் ஊரிலும் நடந்துள்ளது.


மதுரை மாவட்டத்தில் இருக்கிறது பழையூர்பட்டி. இங்கு பொங்கல் தினத்தன்று இரவு பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்போது பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் திருமாவளவன் படத்தை வைத்ததாகவும், விசிகவின் கொடியை ஏற்றியதாகவும் கூறப்படுகிறது. 


இதனால் ஆத்திரமடைந்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த மதிவாணன், சுரேஷ், பழையூர்பட்டி தலைவர் ஆகியோர் இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தின் மந்தையில் கட்டி வைத்திருந்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அதனை தடுக்க சென்ற பெரியவர்களையும், பெண்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


 






இந்நிலையில் இச்சம்பவம் குறித்து இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இத்தனை வருடங்கள் இல்லாத நிகழ்வு என் கிராமத்தில் நடந்திருப்பது மனதை புண்படுத்துகிறது.. அங்கே எல்லோரும் இதுவரை தாய் பிள்ளைகளாக சாதி வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள். அந்த ஒற்றுமையை சிதைவதை பெரியவர்கள் தடுக்கவேண்டும்.


 






அச்சமடைந்த மக்கள் அவர்களை போலீசில் ஒப்படைக்க ஏற்பட்ட முயற்சியே திரித்து சொல்லப்பட்டிருக்கிறது. தவறுகளை மறைத்து அவர்களை அடித்ததை மட்டும் சொல்லி புகாரை திசை திருப்பி இருக்கிறார்கள். இப்போது காவல்துறையும் பெரியவர்களும் தலையிட்டு சரியானதை அறிந்து அதற்கான முடிவு தேடும் முயற்சியில் இருக்கிறார்கள்.


எப்படியோ எங்கள் மண்ணின் பெயர் காப்பாற்றப்பட வேண்டும். தவறுகள் கலையப்பட்டு, உணர்த்தப்பட்டு.  நல்லவர்கள் தண்டிக்கப்படாமல் பகை மேலும் வளராமல் சுமூகமாக மாறினால் போதும்.  சிறுவர்களை இளைஞர்களை தவறான வழிக்கு திசை திருப்புவதை தடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.


மதுரை மட்டுமின்றி சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் சாதிய கொடுமை நிகழ்ந்துள்ளது. வில்வனூரைச் சேர்ந்த அருந்ததியினர் பொங்கல் விழா கொண்டாட்டத்தின்போது சாதி இந்துக்கள் தாக்கியதில் அருந்ததிய மக்கள் ஏழு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகேயுள்ள வீராலூரில் பொதுப்பாதையில் அருந்ததியினர் உடலை எடுத்துச்செல்லக் கூடாது என, சாதி வெறியர்கள் அருந்ததியினரின் குடியிருப்புக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.


 






இதுகுறித்து எம்பியும், விசிக தலைவருமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகேயுள்ள வீராலூரில் அருந்ததியினரின் குடியிருப்புக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ள சாதிவெறியர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் உடனே கைது செய்ய வேண்டும். 


பொதுப்பாதையில் அருந்ததியினர் சடலம் எடுத்துச்செல்லக் கூடாதென சாதிப்பித்தர்கள் நடத்தியுள்ள  இந்த வன்முறை வெறியாட்டத்தை விசிக மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண