தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 


இது தொடர்பான அறிக்கையில், “மார்ச் மாதம் முதல் மே மாதம் முடிய உள்ள கோடைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு 12.5 செ.மீ. மழை இயல்பாக கிடைக்கப் பெறுகிறது. இந்த ஆண்டு 1.3.2024 முதல் 20.5.2024 முடிய 9.63 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 7 விழுக்காடு குறைவாகும்.       


இன்று காலை 8.30 மணி வரை தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் மழைபொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், சராசரியாக 1.77 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகப்படியாக நாமக்கல் மாவட்டத்தில் 7.12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பின்வரும் 42 மழைமானி நிலையங்களில் கனமழை முதல் மிக கனமழை பதிவாயுள்ளது.


இந்நிலையில், கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கியதன் காரணமாகவும், திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கனமழையின் காரணமாக 16.05.2024 முதல் 20.05.2024 முடிய மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 கால்நடை இறப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, 24 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன.


கனமழை எச்சரிக்கை கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், பேரிட சூழலை திறம்பட கையாள்வதற்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறையினை பின்பற்றி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு 15.5.2024 அன்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், மீன்வளத் துறை ஆணையர் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.


கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு பலத்த காற்று, கடல் அலை குறித்தும். பொதுமக்களுக்கு கடல்சீற்றம் குறித்தும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது.


மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதாலும், திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாலும், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 4.05 கோடி செல் பேசிகளுக்கு பொதுவான எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.


கன மழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினைச் சார்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர். திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு 24.05.2024 முடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் போதிய பாதுகாப்புடன் வரவேண்டும் என்றும், சுற்றுலா வருவதை தவிர்க்க எண்ணினால் தவிர்க்கலாம் என்று பொது மக்களது பாதுகாப்பு கருதி தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளனர்.


மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள். கூடுதல் அலுவலர்களுடன் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதோடு. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.