தமிழ்நாடு முன்னாள் வனத்துறை அமைச்சரும், அதிமுகவின் தற்போதைய பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


திடீர் நெஞ்சுவலி :


திண்டுக்கல் சீனிவாசனுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அவரை சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர்.  ஏற்கனவே திண்டுக்கல் சீனிவாசன் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் அளித்த தகவலின்படி, வழக்கமான பரிசோதனைக்காகவே திண்டுக்கல சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்றும், வருகிற திங்கட்கிழமை அவரது சொந்த ஊரான திண்டுக்கலில் இருப்பார் என்றும் தெரிவித்தனர். 


யார் இந்த திண்டுக்கல் சீனிவாசன்..? 


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவர் திண்டுக்கல் சீனிவாசன். அமைச்சர் பதவிக்கு முன்னதாக நாடாளுமன்ற எம்பியாக இருந்தவர். தற்போது எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமான இருந்து அதிமுகவில் பொருளாளராக அடியெடுத்து வைத்துள்ளார். எம்.ஏ. வரை படித்துள்ள திண்டுக்கல்லில் உள்ள ஆர்.எம்.காலனியில் தற்போது வசித்து வருகிறார். தொழில் அதிபராகவும் அறியப்படுகிறது. 


1989ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு மூன்று முறை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2016 ஆண்டு அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் தமிழக வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நின்று அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.