முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 6ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு பாஜகவின் தலைமையகமான தி.நகர் கமலாலயத்தில் அப்துல்கலாமின் படத்திற்கு  மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அப்துல் கலாம் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவர் ஆவதை திமுக தடுத்ததாக விமர்சித்திருந்தார். 



அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டு குறித்து திமுக ஆதரவாளரான பாலாவிடம் கேட்டபோது, 2002ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட அப்துல் கலாமிற்கு அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த திமுக ஆதரவளித்ததாக தெரிவித்தார். 2007ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் 2006 டிசம்பரில் டெல்லி சென்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்த கருணாநிதி, மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திட்டமுள்ளதா? என கேட்டபோது, குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் திட்டமில்லை என அப்துல்கலாம் கருணாநிதியிடம் கூறியாதாக தெரிவித்தார். அப்துல் கலாமின் இந்த முடிவுக்கு பிறகே கருணாநிதி, அப்போதிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் நிறுத்திய பிரதீபா பாட்டிலை ஆதரித்ததாக கூறியதுடன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரலாற்றை தெரிந்து கொண்டு பேச வேண்டும் என பாலா கூறினார்.


 


2002ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றை சுருக்கமாக பார்க்கலாம்.


ஆதரித்த கருணாநிதி-வெற்றி பெற்ற கலாம்


கடந்த 2002ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, ஏற்கெனவே 1992 முதல் 1997ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன், மீண்டும் குடியரசுத் தலைவராக போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.



இந்த நிலையில் மத்தியில் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அணு ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தார் பிரதமர் வாஜ்பாய். தேசிய ஜனநாயக கூட்டணியில் கருணாநிதி தலைமையிலான திமுக அப்போது அங்கம் வகித்தது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் அப்துல் கலாமை ஆதரிப்பதாக அறிவித்த நிலையில் குடியரசுத் தலைவருக்கான போட்டியில் இருந்து கே.ஆர்.நாராயணன் விலகினார்.



இதனையெடுத்து அப்துல் கலாமை காங்கிரஸ் கட்சியும் ஆதரிக்க முடிவெடுத்தது. இருப்பினும் அப்துல் கலாமை மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்  ஆதரிக்க மறுத்த நிலையில், நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான கேப்டன் லட்சுமி சாகலை இடதுசாரிகள் வேட்பாளராக நிறுத்தினர். வாக்குப்பதிவின் முடிவில் அப்துல்கலாம் வெற்றி பெற்று இந்தியாவின் 12ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார். 


போட்டியிட விரும்பிய கலாம்-பிரதீபா பாட்டிலை ஆதரித்த கருணாநிதி


2002ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற அப்துல்கலாமின் பதவிக்காலம் 2007ஆம் ஆண்டு நிறைவடைய இருந்த நிலையில், அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்கும்பட்சத்தில் மீண்டும் குடியரசுத் தலைவராக இருக்க தயார் என அப்துல்கலாம் அறிவித்திருந்தார். இதற்கு பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்திருந்தனர். இருப்பினும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த கட்சிகள், இடதுசாரிகள், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் அப்துல் கலாமின் இந்த முடிவை ஆதரிக்காத நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அறிவித்தார்.



அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சார்பில் பிரதீபா பாட்டிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பைரோன் சிங் செக்காவத்தும் வேட்பாளராக களமிறங்கினார். இருப்பினும் அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்குதேசம், சமாஜ்வாதி ஆகிய மாநில கட்சிகள் இணைந்து அப்துல் கலாமை வேட்பாளராக முன்னிருத்த முயற்சி செய்தன. இருப்பினும் மற்ற கட்சிகள் ஆதரவு இல்லாததால் அப்துல் கலாம் போட்டியிட மறுத்துவிட்டார். 13ஆவது குடியரசுத் தலைவராகவும் முதல் பெண் குடியரசுத் தலைவராகவும் பிரதீபா பாட்டில் தேர்வானார். 


கலாம் என்றால் கலகம் என்ற கருணாநிதி


பிரதீபா பாட்டிலின் பதவிக்காலம் 2012ஆம் ஆண்டு முடிவடைய இருந்த நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் பழங்குடியினத்தை சேர்ந்தவருமான பி.ஏ.சங்மா தன்னை குடியரசுத் தலைவராக ஆதரிக்கக் கோரி பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பி.ஏ.சங்மாவிற்கு ஜெயலலிதா மற்றும் நவீன்பட்நாயக் ஆகியோர் ஆதரவளித்திருந்தனர். இந்த நிலையில் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக முன்னிருத்த பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முயன்றன. 


அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக முன்னிருத்த மம்தா பானர்ஜி எடுத்துவரும் முயற்சிகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பியபோது, 


கலாம்  என்பதற்கு  தமிழில்  கலகம் என்றும் ஒரு பொருள் உண்டு. எப்படியோ ஜனாதிபதி தேர்தலிலும் கலகம்  உருவாகியிருக்கிறது என்று பதிலளித்திருந்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு திமுக ஆதரவளிக்கும் என கூறிவிட்டதால் அந்த நிலைப்பாட்டில் இருந்து திமுக பின் வாங்காது. முதலில் ஒருவரைச் சொல்லிவிட்டு பிறகு நாங்கள் மாற மாட்டோம்”என்று பதிலளித்தார்.


 


கருணாநிதியின் இந்த பதிலானது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பலரிடம் இருந்து கண்டனங்களும் வந்திருந்தன. இருப்பினும் இது குறித்து அப்துல் கலாம் எந்த கருத்தையும் தெரிவிக்காததுடன், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திட்டம் ஏதும் இல்லை எனவும் அவர் கூறியதால், தேசிய ஜனநாயக கூட்டணியும் அதிமுகவும் பி.ஏ.சங்மாவை ஆதரித்தது, மம்தா பானர்ஜி பிரணாப் முகர்ஜியை ஆதரித்தார். வாக்குப்பதிவின் இறுதியில் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.