இப்படி ஒரு தலைமை ஆசிரியரா? அரசு பள்ளி மாணவிக்கு மீண்டும் வந்த கண்பார்வை..!
அரசு பள்ளி மாணவிக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஓய்வு பெற்ற மருத்துவ உதவியாளரால் கண் பார்வை மீண்டும் கிடைத்துள்ளது.

தருமபுரி அருகே கண்ணில் முள் குத்தி பார்வை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அரசு பள்ளி மாணவிக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஓய்வு பெற்ற மருத்துவ உதவியாளரால் கண் பார்வை மீண்டும் கிடைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை ஆசிரியரால் பார்வை பெற்ற மாணவி!
தருமபுரி மாவட்டம் காரப்பாடி மலை கிராமம் உள்ளது. இந்த கிராமம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 11 கிலோ மீட்டர் வரை இந்த மலை கிராமத்துக்கு போக்குவரத்து வசதிகள் ஏதும் கிடையாது. இந்த சூழலில் ரமேஷ் தனது மனைவி வள்ளியம்மாள் மற்றும் இரு மகள்களுடன் அந்த மலை கிராமத்தில் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.
மலை கிராமம் என்பதால் வாழ்வாதாரதத்திற்கு அண்டை மாநிலமான கர்நாடகாவின் மைசூருவில் ரமேஷும், வள்ளியம்மாளும் கூலி வேலை செய்து வருகின்றனர். இருவரும் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். மகள்கள் இருவரும் காரப்பாடி கிராமத்தில் உறவினர்கள் வீட்டில் தங்கி அருகில் உள்ள வள்ளி மதுரை அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். மூத்த மகள் சந்தியா 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருக்கும்போது சந்தியாவுக்கு வலது கண்ணில் கூர்மையான முள் பட்டு கண் சிவந்துள்ளது. வலியால் துடித்த மாணவி இதுகுறித்து வீட்டில் யாரிடமும் கூறவில்லை. போக போக கண்ணில் வலி அதிகரிக்கவே தொலைபேசியில் பெற்றோரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அவர்கள் சொட்டு மருந்து வாங்கி பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு வாங்கி பயன்படுத்தியபோதும் வலி குறையாமல் கண் பார்வை மங்கலாக இருந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் பரிசோதனை
இதனால் மாணவியை உறவினர்கள் தருமபுரி மற்றும் அரூர் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, கண்ணில் புரை விழுந்து உள்ளது போல தெரிகிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தனியார் மருத்துவமனையில் கூறியுள்ளனர்.
மாணவி சந்தியாவின் கண் பார்வை பிரச்சனையை அறிந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமால், தீர்த்தமலை பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற கண் மருத்துவ உதவியாளர் கலையரசனை தொடர்பு கொண்டு மாணவியின் நிலை குறித்து தெரிவித்து உதவி கேட்டுள்ளார். கலையரசன் கோவை கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் கல்பனா நரேந்திரனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனை அடுத்து சிறுமிக்கு கோவை தனியார் கண் மருத்துவமனை இலவசமாக சிகிச்சை மேற்கொள்ள முன் வந்தது.
கண்புரையை அகற்றி அதிநவீன முறையில் லென்ஸ் பொருத்தப்பட்டது
இந்நிலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி சிறுமிக்கு கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் குழுவினர் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முள் குத்தியதால் ஏற்பட்ட கண்புரையை அகற்றி அதிநவீன முறையில் லென்ஸ் பொருத்தப்பட்டு 26 ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். அதில், மாணவியின் பிரச்சனை நீங்கி நல்ல பார்வை திறன் இருப்பதை உறுதி செய்தனர். தலைமை ஆசிரியரின் நடவடிக்கையால் மலை கிராமத்தைச் சார்ந்த ஏழை பள்ளி மாணவிக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது.