தருமபுரியில் சுதந்திர போராட்ட தியாகி மனைவியிடம் ரூ.67 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றும் தொழிலதிபர் மீது வன்கொடுமை, கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி தியாகி மனைவி, உண்ணாவிரதப் போராட்டம் செய்தார்.

 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி வடிவேல் அவரது மனைவி பார்வதி. இருவரும் பென்னாகரம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். அப்பொழுது இவர்களது விவசாய நிலத்தினை அரசு தேவைக்காக எடுத்துக் கொண்டு, இழப்பீடாக பணம் கொடுத்துள்ளது. இந்நிலையில் சுதந்திர போராட்ட தியாகி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது மூத்த மகன் மனோகரனுக்கு பணம் கொடுத்து பாகப்பிரிவினை செய்துள்ளனர். இந்நிலையில் அரசு இழப்பீடாக வழங்கிய தொகையினை இருவரும் வங்கியில் டெபாசிட் செய்து, அதிலிருந்து பணத்தை பெற்று குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதில் தியாகி வடிவேல் ரூ.35 லட்சமும், மனைவி பார்வதி மீது ரூ.40 லட்சம் டெபாசிட் செய்துள்ளனர்.



 

இந்நிலையில் தியாகி வடிவேலின் தங்கை மகன் பி.கே.பவுன்ராஜ் என்பவர் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு தொழில் செய்வதற்காக பணம் தேவைப்படுகிறது. தனக்கு பணம் கொடுத்தால், வங்கியை விட அதிக வட்டியை தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் பி.கே.பவுன்ராஜ் உதவியாளர் ரமேஷ் என்பவர் மூலம் ரூ.67 லட்சம் பணத்தினை கடனாக கொடுத்துள்ளனர். இந்த பணத்திற்கு மாத மாதம் வங்கி வட்டியை விட கூடுதல் வட்டி தருவதாக தொழிலதிபர் பி.கே.பவுன்ராஜ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பி தியாகி குடும்பத்தினர் பணம் கொடுத்துள்ளனர்.  ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு வட்டி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தியாகி வடிவேல் உயிரிழந்துள்ளார். அப்பொழுது கூட இந்த பணத்தை பி.கே.பவுன்ராஜ் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

 

கடந்த ஏழு ஆண்டுகளாக தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என தியாகி வடிவேல் மனைவி பார்வதி, பி.கே.பவுன்ராஜை வலியுறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2022 ஜூலை மாதம் 10 லட்சம் ரூபாய்க்கு உதவியாளர் ரமேஷ் மூலம் காசோலையை கொடுத்துள்ளார். மேலும் மீதி இருக்கின்ற தொகை வட்டியுடன் இரண்டு மாதங்களில் தருவதாக உறுதியளித்ததாக தெரிகிறது. இந்நிலையில் மீதம் இருக்கின்ற பணத்தை தியாகி வடிவேல் மனைவி பார்வதி தனது இளைய மகன் மூலமாக பி.கே.பவுன்ராஜ் இடம் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் பணத்தை கொடுப்பதற்கு தவணைக்காலம் மட்டுமே தெரிவித்து வந்துள்ள நிலையில் பார்வதியை பி.கே.பவுன்ராஜ் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.



 

இதனால் அச்சமடைந்த தியாகி வடிவேல் மனைவி பார்வதி கடந்த மாதம் தொப்பூருக்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் இடம் நேரில் மனு அளித்துள்ளார். இந்த மனுவை முறையாக விசாரிக்காமல் முடித்து வைத்துள்ளனர். மேலும் சுதந்திரப் போராட்ட தியாகியின் குடும்பத்திற்கே, இந்த நிலை இருப்பதால் தன்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று தனது வீட்டருகே ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எனது புகார் மீது முறையாக விசாரணை நடத்தாமல், வழக்கை முடித்து வைத்து, பி.கே.பவுன்ராஜ்க்கு துணைபோன காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது பணத்தை ஏமாற்றிய பி.கே.பவுன்ராஜ் மீது, பெண் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் இளைய மகன் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.