தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஜெல்மாரம்பட்டியை சேர்ந்த முத்துவேல், சுரேஷ் இருவரும் டிராக்டர் வைத்து வேலை செய்து கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் பென்னாகரம் அடுத்த தாளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த அதிமுக விவசாய பிரிவு மாநில தலைவரும், தருமபுரி மாவட்ட பால்வள தலைவருமான டி.ஆர்.அன்பழகன், தனது ஸ்கார்பியோ காரில் முருகன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடன் வந்து, முத்துவேல் மற்றும் சுரேஷ் இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் சுரேஷிடம், உன் தம்பி எங்களது டீசலை திருடி ஜேசிபிக்கு ஊற்றி ஓட்டி வருகிறேன் என்று கூறி மிரட்டி, முத்துவேல் சுரேஷ் இருவரையும் ஆட்களை வைத்து தனது கடத்திச் சென்றுள்ளார்.

 



 

தொடர்ந்து பெத்தம்பட்டியில் உள்ள அன்பழகனுக்கு சொந்தமான கல்குவாரியில் வைத்து சுரேஷ், முத்துவேல் இருவரையும் ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை சொடர்ந்து கல்குவாரி பகுதிக்கு சென்ற முத்துவேல், சுரேஷ் உறவினர்களை, யாரும் உள்ளே வரக்கூடாது. உள்ளே வந்தீர்கள் என்றால் வெட்டி புதைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனை அடுத்து முத்துவேல் தந்தை பெரியசாமி பென்னாகரம் காவல் நிலையத்தில் பிஆர் அன்பழகன் மற்றும் முருகன், ராஜேந்திரன் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.

 



 

இந்த புகாரை அடுத்து பென்னாகரம் காவல் துறையினர் டி.ஆர்.அன்பழகன், முருகன், மகேந்திரன் உள்ளிட்டோர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். அதிமுகவை சேர்ந்த டி.ஆர். அன்பழகன், தருமபுரி  மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளராகவும், ஜெ ஜெயலலிதா பேரவை மாநில செயலாளராகவும், மாவட்ட ஊராட்சி குழு மற்றும் பென்னாகரம் ஒன்றியக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.