தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கலைக்கல்லூரி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு, அதைத் தருமபுரம் மடாதிபதி திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீன மடத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. கொரோனா சிகிச்சை பெறுவதற்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 280 படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அதில் 70 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகள் உள்ளது. 


இந்நிலையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் தருமபுரம் ஆதீனத்திற்கு  சொந்தமான கலைக்கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள தருமபுரம் ஆதீனம் சம்மதம் தெரிவித்திருந்தார். அதன்படி கல்லூரியில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் இன்று துவங்கப்பட்டுள்ளது. 



கல்லூரியில் துவங்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தை பார்வையிடும் தருமபுரம் ஆதீனம்


 


இதனை இன்று பார்வையிட்ட தருமை ஆதினம் 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பார்வையிட்டு பின்னர் சிகிச்சை மையத்தை மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவர் ராஜசேகரிடம் ஒப்படைத்தார். 



கபசுர குடிநீர் வழங்கும் தர்மபுர ஆதீனம்


முன்னதாக ஆதீன மடத்தின் சார்பில் தினசரி 2000 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த மடாதிபதி,  பதினோரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் கொரனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கடையூர், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருப்பனந்தாள், திருவையாறு, திருபுவனம் உள்ளிட்ட ஆலயங்கள் சார்பில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் மந்திரமாவது நீறு என்ற தேவாரப் பதிகங்களை தினசரி வீட்டில் பாடல் செய்து பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.