தருமபுரம் ஆதீனம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு ரூபாய் 11 லட்சத்துக்கான காசோலையை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கினார். உலகில் மனித செயல்பாட்டை ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பலர் பொருளாதாரம், உறவுகளையும் இழந்து பல இன்னல்களை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்றின் கோரத்தாண்டவம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் தடுப்புக்கும், சிகிச்சைக்கும் தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் எதிர்கொள்ள பொருளாதார ரீதியாகவும் பலம் வேண்டும் என்பதால், அரசு மக்களிடையே நிவாரண நிதி வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அதனை ஏற்று பலரும் அரசுக்கு நிவாரண தொகையை வழங்கி வருகின்றனர்.
இந்த நன்கொடைகளில் ஒன்றாக, மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீனம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு ரூபாய் 11 லட்சம் இன்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையில் ஆதீனத் திருமடத்தில் கையெழுத்திட்டு வழங்கிய தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கூறுகையில், “கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு காட்டும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி திருபுவனம், திருப்பனந்தாள், திருவையாறு ஆகிய ஆதீனக் கோயில்கள் சார்பில் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தினசரி உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், நாளை முதல் தருமபுரம் ஆதீனம் சார்பில் கிராமங்கள்தோறும் 2000 பேருக்கு தினசரி கபசுரக் குடிநீர் வழங்கப்படும்” என்றார்.
நோய் நீங்குவதற்காக ஆதீன திருமடத்தில் 'அவ்வினைக்கு இவ்வினை" என்கிற திருநீலகண்ட திருப்பதிகம், 'மந்திரமாவது நீறு" தேவாரத் திருப்பதிகங்கள் பாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீட்டில் இவற்றை பாடிப் பிரார்த்தனை செய்து தொற்று நீங்க இறைவனை பிரார்த்திப்போம் என தெரிவித்தார்.