இயற்கையின் கோர தாண்டவம் எந்தளவுக்கு இருக்கும் என தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்திய தனுஷ்கோடி அழிவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 


தமிழ்நாட்டை பொறுத்தவரை ராமேஸ்வரம் ஊருக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. சுற்றிலும் கடல், அதற்கு அந்த பக்கமாக பாம்பன் தீவு, தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களும், ஏராளமான கோயில்களும் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் தான் தனுஷ்கோடி உள்ளது. ஒரு பக்கம் இந்திய பெருங்கடல், மறுபக்கம் வங்கக்கடல் இருந்தாலும் அமைதியான வாழ்க்கை என மற்ற இடங்களைப் போலவே மக்கள் மகிழ்ச்சியக வாழ்ந்து வந்தனர். ஆனால் வர்த்தக நகரகமாக இருந்த நிலையில் ஒருநாள் இரவில் நடந்த சம்பவம் ஒன்று ஒட்டுமொத்த தனுஷ்கோடியையும் இல்லை என்னும் அளவுக்கு துடைத்தெறிந்து விட்டது. 


1964 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி தான் அந்த சம்பவம் தொடங்கியது. அதற்கு 5 நாள் முன்னதாக அதாவது டிசம்பர் 17 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த  தாழ்வு நிலை டிசம்பர் 19 ஆம் தேதி புயலாக மாறுகிறது. அது அப்படியே டிசம்பர் 21 ஆம் தேதிக்குப் பின் மேற்கு நோக்கி நகர்கிறது. இது நகரும் வேகமானது மணிக்கு 400 கி.மீ. முதல் 550 கி.மீ, வேகமாக இருந்தது. டிசம்பர் 22 ஆம் தேதி தனுஷ்கோடி பகுதிக்கு புயல் நகர்கிறது. அப்போது அங்கு காற்றின் வேகம் மணிக்கு 280 கி.மீ., ஆக இருந்தது. புயலால் அலைகளும் சீறிப்பாய்ந்து வந்தது. கிட்டத்தட்ட 23 அடிக்கு அலைகள் மேலெழும்பி வந்ததாக சொல்லப்படுகிறது. 


இதனால் ஊருக்குள் கடல்நீர் புகுந்தது. அங்குள்ள வீடுகள், கோயில்கள், கல்வி நிலையங்கள், சர்ச், தபால் நிலையம் என அனைத்தையும் கடல் தன்னுள்ளே அள்ளிக்கொண்டு சென்றது. நிம்மதியாக தூங்க சென்ற மக்கள் என்ன நடந்ததே என தெரியாமல் மாண்டு போயினர். அதேசமயம் புயலின் கோர தாண்டவத்தை அறியாமல் தனுஷ்கோடி ரயில் நிலையத்தை நோக்கி பாம்பன் - தனுஷ்கோடி பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது. 


இந்த ரயில் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு அப்படியே கடலுக்குள் விழுந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். மறுநாள் (டிசம்பர் 24) காலை விடியும்பொழுது அன்றைய இரவில் தப்பித்தவர்கள் கண்முன்னே உயிரிழந்தவர்கள் உடல்கள்தான் மிதந்து வந்தது. எங்கும் மரண குரல்கள்தான். தமிழ்நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்டது தனுஷ்கோடி. 


தகவல் அறிந்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவே துயரத்துக்கு ஆளானது. அன்றைய முதலமைச்சர் பக்தவச்சலம் சம்பவ இடத்துக்கு வந்து புயல் பாதிப்புகளை பார்வையிட்டார். ராணுவம், உள்ளூர் மீனவர்கள், கடலோரப்படை என அனைத்தும் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். ஐ.நா.சபை தனுஷ்கோடியை வாழத் தகுதியற்ற நகரம் என அறிவித்தது. இந்த பேரழிவு ஏற்பட்டு 59 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டாலும், தற்போது தனுஷ்கோடியை மேம்படுத்த பல நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வந்தாலும், வரலாற்றில் இயற்கை இடர்ப்பாடுகளின் தழும்பாக தனுஷ்கோடி அழிவு சம்பவம் மாறிவிட்டது.