பருவ மழை நீர் தொடங்குவதற்கு முன்பே காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி நிரம்பியது 18 அடி கொள்ளளவு தாமல் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

Continues below advertisement

ஏரிகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ளது. ஆந்திரா மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த கனமழையால் பொன்னை அணைக்கட்டில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் திருப்பி விடப்பட்டது.

கம்பன் கால்வாய் மற்றும் கோவிந்தவாடி கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடுபட்டதால், காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி தனது முழு கொள்ளளவான 18 அடியை நிரம்பி உபரி நீர் கலங்கல்கள் வழியாக வெளியேறி வருகிறது.

Continues below advertisement

தாமல் ஏரி நிரம்பியது

18 அடி முழுவதுமாக நிரம்பி மதகுகள் வழியாக நீர் வெளியேறி வருவதால் சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். ஏரியின் மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீரில் சிறுவர்கள் உற்சாக குளியல் போட்டு செல்கிறார்கள். 

காஞ்சிபுரத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே ஏரி நிரம்பி இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து கால்வாய் மூலம் வரும் தண்ணீர், பிற ஏரிகளுக்கு திருப்பி விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் கொண்டாட்டம் 

பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தாமல் ஏரி நிரம்பி இருப்பதால் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், ஒரு வருடத்திற்கு பிறகு ஏரியிலிருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியே செல்வதாலும் ஆர்வத்துடன் பொதுமக்கள் அங்கு சென்று கண்டு களித்து வருகின்றனர். இதனால் தாமல் ஏரி பொதுமக்களின் குட்டி சுற்றுலா தளமாக மாறி வருகிறது.