கடந்த சில வருடங்களாக உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார், மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த அருணகிரிநாதர். அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர் சற்று அமைதியானார். அதிமுக- பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றபின் அவரை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசிவிட்டு மதுரை திரும்பினார். ஓ.பி.எஸ் தியானத்துக்கு பின் அதிமுக-வுக்குள் ஏற்பட்ட பிளவை அடுத்து யாருக்கு ஆதரவு என்பதை தெரிவிக்காமல் பொறுமை காத்து வந்தார். தொடர்ந்து அரசியலில் பெரியளவு ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த திங்கள் அன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை தற்போது மோசமடைந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆதீனம். அவரை கவனித்து வரும் மடத்துப் பணியாளர்களை தவிர்த்து வேறு யாரும் அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே மதுரை ஆதீனத்தின் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆதினத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் அடுத்த ஆதீனம் யார் என்கிற சர்ச்சை உருவாகியுள்ளது.கடந்த இரண்டு தினங்களுக்கு இடையே நித்யானந்தா ஆதீனம் விரைவில் குணமடைய வேண்டும் என விடுத்திருந்த அறிக்கையில் தன்னை 293வது சன்னிதானம் எனக் குறிப்பிட்டிருந்ததால் இந்த சர்ச்சை உருவாகியிருக்கிறது.
தனது அறிக்கையில், ‘“ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்" அவர்கள் 1980ம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் குருமஹாசன்னிதானமாக முடி சூட்டப்பட்டார்கள். அன்றிலிருந்து மதுரை மக்களுக்கு ஞானஅறிவியலை வழங்கும் ஆன்மீக மற்றும் மதரீதியான எல்லா கடமைகளும், பொறுப்புகளையும் திறம்பட செய்து நிர்வகித்து வந்தார்கள்.
292வது குருமஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் அவர்கள் ஏப்ரல் 27, 2012 அன்று என்னை, 293 குருமஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ நித்யானந்த ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் என பிரகடனப்படுத்தி, தன் சட்டப்பூர்வ வாரிசாக அறிவித்து முடிசூட்டினார்.
இதன் மூலம் மதுரை ஆதீனம் குருமஹாசன்னிதானத்திற்க்கான எல்லா பொறுப்புகளும், உரிமைகளும், கடமைகளும், அதிகாரங்களும் மற்றும் ஆன்மிக ரீதியான, மதரீதியான, சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகளும் பெற்று, மதுரை ஆதீனம், கைலாசோன்னத சியாமளா பீடம் சர்வஞ்ஞபீடத்தின் ஆன்மீசு, மத,மற்றும் மொழியியல் சிறப்புகளை புனரமைத்துள்ளேன்.
கைலாசத்தின் நடைமுறை அதிகாரம் பெற்ற ஆன்மீக தூதரகங்கள் ஸ்ரீ மிருதுஞ்சய ஹோமம் மற்றும் பிற, தொடர்புடைய சடங்குகளை, ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் நீண்ட நாட்கள் வாழ்வதற்காக அவருக்கு தியானசிகிச்சை பிரார்த்தனைகளை நடத்த வேண்டும்.
அமைதிக்கான நிமிடங்கள், தியானத்தைப் பயன்படுத்தி உலகளாவிய விழிப்புணர்வை உயர்த்துவதற்காக கைலாசா தலைமையிலான ஒரு மனிதாபிமான முயற்சி, இதுவரை 4.3 பில்லியன் நிமிடங்களை எட்டியுள்ளது. அகண்ட நிர்விகல்ப சமாதி ஞான யாகம் நடத்தவும், அமைதிக்காக அமர்வுகள் நடத்தவும் மற்றும் அவர்களின் நிமிடங்களை அமைதிக்காக வழங்கவும், அவர்களின் குணப்படுத்தும் பிரார்த்தனைகளை அனுப்பவும் கைலாசாவின் இறையாண்மை ஆணையை நான் கட்டளையிடுகிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
தனது அறிக்கையில் மதுரை ஆதீனம் குருமஹாசன்னிதானத்திற்க்கான எல்லா பொறுப்புகளும், உரிமைகளும், கடமைகளும், அதிகாரங்களும் மற்றும் ஆன்மிக ரீதியான, மதரீதியான, சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகளும் தான் பெற்றுள்ளதாக நித்யானந்தா பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளதை அடுத்து தற்போது மதுரை ஆதீனத்தின் அறை பூட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2012ல் தற்போதைய ஆதீனத்தால் தனது அடுத்த வாரிசு என அறிவிக்கப்பட்ட நித்யானந்தா பின்னர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிறகு 2016ல் திருநாவுக்கரசு என்பவரை தனது அடுத்த வாரிசாக ஆதீனம் அறிவித்தார். அடுத்த ஆதீனம் நித்யானந்தாவா? கைலாசா என்னும் நாட்டின் கதியென்ன? என பல குழப்பங்களை இந்த அறிக்கை உருவாக்கியுள்ளது.