தமிழக அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

சில துறை நிபுணர்களிடம் தமிழ்நாடு அரசு பட்ஜெட் குறித்து Abp செய்தி நிறுவனம் கருத்து கேட்டது. அதன், விவரங்கள் பின்வருமாறு:-       

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்:

அகில இந்திய தொழில் முனைவோர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளர் கே.இ ரகுநாதன் நம்மிடம் பேசுகையில், "எதிர்பார்ப்புகள் குறித்து பேசுவதற்கு முன்பாக ஒரு சில கருத்துக்களை பதிவுசெய்ய வேண்டியது அவசியமாகிறது.  தமிழகத்தில் கிட்டத்தட்ட 55 லட்சம் தொழில் முனைவோர்கள் உள்ளனர். எம்எஸ்எம்இ துறையில் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழகம். மாநிலத்தின் மொத்த வருவாயில் 37% தொழில் முனைவோர்கள் மூலமாக கிடைக்கிறது. ஆம்பூர், ராணிப்பேட்டை, சென்னை, கோயம்பத்தூர், சிவகாசி, சேலம், நாமக்கல், கரூர், ஓசூர் என  மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் பரந்து கிடைக்கின்றன. 

முன்னதாக, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வரையறையை மத்திய அரசு உயர்த்தியது.இதன் காரணமாக, 5,000 நிறுவனங்களைத் தவிர நாட்டின் அனைத்து நிறுவனங்களும் தற்போது எம்எஸ்எம்இ வரையறைக்குள் வருகிறது.

பிரிவு

பழைய மூலதனம்

பழைய விற்றுமுதல்

புதிய மூலதனம்

புதிய விற்றுமுதல்

குறு

25 லட்சம்

10 லட்சம்

1 கோடி

5 கோடி

சிறு

5 கோடி

2 கோடி

10 கோடி

50 கோடி

நடுத்தரம்

10 கோடி

5 கோடி

50 கோடி

250 கோடி

இந்த கொரோனா காலத்தில் அதிக பாதிப்பை சந்தித்தது இந்த குறு, சிறு தொழில் நிறுவனங்கள்தான். உழைத்தால் மட்டுமே இவர்களால் வாழ முடியும். கடந்தாண்டு ஏற்பட்ட முதலாவது அலையில் கிட்டத்தட்ட 7 மாதங்கள் பொது முடக்கநிலை காரணமாக நிறுவனங்கள் மூடப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, சில முன்னேற்றங்கள் இருந்தன. கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு பெரிய சலுகைகள் அறிவிக்கப்படவில்லை. ரங்கராஜன் குழு பரிந்துரை அடிப்படையில் 300 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. 

இருப்பினும், அப்போது கொரோனா இரண்டாவது அலை பற்றியும்  ஆட்சி மாற்றம் தொடர்பான விவரங்களும் நம்மிடம் இல்லை. எம்எஸ்எம்இ துறையில் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய வலியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களில் பலர் தொழில் முனைவோர்கள்தான். சுற்றுலா, சினிமா உள்ளிட்ட 52 துறைகள் இன்னமும் பழைய நிலைமைக்கு வரவேயில்லை.   

திமுகவின் தேர்தல் அறிக்கையில், ஏழை, எளிய, சிறு வணிகர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் , கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும், புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும், ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கிட 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கவே இந்த நூறு நாட்கள் கடந்து விட்டது.      

சிறிய கடன் வாங்கியவர்களுக்கு 6 மாத காலத்திற்கு 'இ.எம்.ஐ' கால அவகாசம் கேட்டு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என 12 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். எனவே, நாளையை பட்ஜெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.     

பூவுலகின் நண்பர்கள்:  

பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த சுந்தர் ராஜ் ஏபிபி நாடு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "சமீபத்தில் வெளியான ஐபிசிசி அறிக்கையில் 1750-ஆம் ஆண்டுக்குப் பிறகு வளிமண்டலத்தில் நிறைந்துள்ள பசுமை இல்ல வாயுக்களின் செறிவுக்கு சந்தேகத்திற்கிடமின்றி மனித நடவடிக்கைகள் மட்டுமே காரணம் என்பதை அறிவியலாளர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். உலக வெப்பமயமாதலானது அடுத்த பத்தாண்டுகளுக்குள் 1.5° செல்சியஸ் அளவிற்கு உயர்ந்து விடும் என்றும் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் அளவை, உடனடியாக, வேகமாக, பெரிய அளவிற்கு  குறைக்காவிட்டால் 2° செல்சியஸ் அளவைக் கூட தாண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே, காலநிலை மாற்றத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சுற்றுச்சூழல் அம்சங்களில் போதிய கவனம் செலுத்தாத காரணத்தினால் புவி வெப்பமடைதல் முதல் எபோலா நோய் போன்ற எண்ணற்ற இன்னல்களை  மனித சமூகம் சந்தித்து வருகிறது. மீண்டும், அனல்மின் நிலையங்களில் நாட்டம் செலுத்தினால் ஒன்றும் செய்யமுடியாது.  வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வது வரவேற்கத்தக்க விசயம். ஆற்றல் நுகர்வு வரி (Energy Consumption Tax) இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனவே, நாளைய பட்ஜெட் மிகப்பெரிய தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.   

  1. தமிழ்நாட்டில் காலநிலை மாற்றம் மற்றும் ஒருங்கிணைந்த நலத்துக்கான ஆணையம் அமைக்கப்படவேண்டும்.
  2. புதிதாகக் கட்டப்படும், திட்டமிடப்படும் அனைத்து அனல்மின் நிலைய கட்டுமானங்களையும் நிறுத்திவிட்டு. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அதிகமாக முதலீடு செய்யவேண்டும்.
  3. மாநிலம் முழுக்க, அனைத்து நீர்நிலைகளையும் அவற்றின் முழு திறனை அடையும் அளவுக்கு சரிசெய்ய திட்டம் வகுக்கவேண்டும்.
  4. பொதுப் போக்குவரத்து: பொதுப் போக்குவரத்து கட்டமைப்புகளில் அதிக அளவிலான முதலீடுகளைச் செய்யவேண்டும்.
  5. காடுகள் பாதுகாப்பு மற்றும் காட்டு உயிர் குற்றங்களைத் தடுக்க கூடுதல் கவனம் மற்றும் நிதி ஒதுக்கவேண்டும்.
  6. காட்டுயிர் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
  7. எண்ணூர் மற்றும் பழவேற்காடு பகுதிகளை நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்.
  8. தமிழ்நாட்டில் அதிக தொழில்மயமாக்கப்பட்ட பகுதிகளில் காற்று, நீர் மற்றும் நிலத்தில் ஏற்பட்ட மாசுபாடுகள் குறித்து ஆராய்ந்து மறுசீரமைக்க திட்டங்கள் அறிவிக்க வேண்டும்.
  9. தமிழ்நாடு முழுவதுமுள்ள சதுப்பு நிலங்களை வகைப்படுத்தி, அவற்றைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு பட்ஜெட் மீதான சில எதிர்பார்ப்புகளாக உள்ளன என்றும் தெரிவித்தார்.