கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில், கிறிஸ்து பிறப்பு திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். 


கிறிஸ்தவனும் நான்தான், முஸ்லிமும் நான்தான்:


பின்னர் விழா மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "உலகமே கொண்டாடும் விழா நமது கிறிஸ்மஸ் விழா எனக் கூறி அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். தான் படித்த பள்ளி டான்பாஸ்கோ, கல்லூரி படிப்பு லயோலா கல்லூரி என்ற உதயநிதி, நானும் ஒரு கிறிஸ்துவன் என பெருமைப்படுகிறேன் எனக் கூறினார். நீங்கள் கிறிஸ்துவனாக நினைத்தால் நான் கிறிஸ்தவன், முஸ்லிமாக நினைத்தால் நான் முஸ்லிம், இந்துவாக நினைத்தால் நான் இந்து. நான் எல்லோருக்கும் பொதுவானவன். அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன என்றார். 



எப்படி நீதி கிடைக்கும்?

அதே மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலர் இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார். சமூக வலைத்தளங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும், பொய்யை மட்டுமே அவர்கள் பரப்பி வருவதாக தெரிவித்தார். சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பேசி உள்ளதை சுட்டிக்காட்டிய உதயநிதி, இப்படி ஒரு நீதிபதி இருந்தால், நீதிமன்றத்தில் நியாயம் எப்படி கிடைக்கும் என கேள்வி எழுப்பினார். மதரீதியான அவதூறு பேச்சு பேசிய நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது, அதிமுக அதனை ஆதரிக்கவில்லை என்றார்.


இதன் மூலம் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணி தொடர்கிறது என்பது உறுதியாகிறது என்றார். சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஒரு தீர்மானம் கூட மத்திய பாஜக அரசை கண்டித்து இயற்றப்படவில்லை என்பதே இதற்கு சாட்சி என்றார். திராவிட இயக்கம் இருக்கும் வரை, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்போம் எனக் கூறினர்.


ஆதரவு வேண்டும்:


கிறிஸ்தவ மக்கள் வைத்த கோரிக்கைகள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும், திமுக கூட்டணிக்கு உங்கள் ஆதரவை கொடுக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.


முன்னதாக, கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வேர்க்கல்வித்துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை சார்பில் "நான் முதல்வன்" திட்டத்தில் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையத்தை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.



இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி 31 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் 29 மையம் துவக்கி உள்ளோம். இன்று 30 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளோம். கோவை மாணவர்களை சந்திக்கும் போது மனதுக்கு இனிமையாக இருக்கும். நான்கு பேருக்கு வேலை கொடுக்கும் உறுதியோடு படிக்கும் மாணவர்கள் கோவை மாணவர்கள். தமிழ்நாடு ஒட்டுமொத்த பிரச்சனையை தீர்க்கும் மாடல்,திராவிட மாடல் ஃபார்முலா. நான் முதல்வன் திட்டத்தை உலகமே புகழ்ந்து கொண்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் இதுவரை 30 லட்சம் ஒளி ஏற்றி வைத்துள்ளது. 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 25 மாணவர்கள் லண்டன் சென்று வந்தனர். இது தான் திராவிட மாடல் வெற்றி. இதில் 15 பேர் தன்னை சந்தித்தனர். தங்கை அமிர்தா சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது. பல நூறு அமிர்தவை உருவாக்க இந்த நான் முதல்வன் திட்டம் செயல்படுகிறது. வேலை வாய்ப்பை உருவாக்க இந்த அரசு உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு என்றும் திராவிட மாடல் அரசு துணை நிற்கும்" என தெரிவித்தார்.