Weather Update : உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் கடந்த மாதம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக தமிழ்நாட்டில் மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில்,  சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

Continues below advertisement

“ வடக்கு வங்கக்கடல் அதனை ஒட்டியுள்ள ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஜூன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும் காணப்படும். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


ஜூன் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் வரும் 15-ந் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக வெப்பநிலை 36 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 28 டிகிரியாகவும் பதிவாகும்.

மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை மத்திய வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் பலத்த காறறு மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். வரும் 13ந் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கேரளம், கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் வரும் 15-ந் தேதி  வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement