Ponmudi Case: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறதண்டனை பெற்றுள்ள பொன்முடி கைவசம் உள்ள வாய்ப்புகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை:


பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் குற்றவாளிகள் என கடந்த 19ம் தேதி அறிவித்தது. இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக 60.49%  அதாவது ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்ததாக கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதேநேரம், உச்சநீதிமன்றத்தை அணுகி மேல்முறையீடு செய்ய, பொன்முடிக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


பறிபோன அமைச்சர் பதவி:


குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொன்முடி வகித்து வந்த, உயர்கல்வி அமைச்சர் என்ற பதவியை அவர் இழந்துள்ளார். இதோடு, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., பதவியையும் சட்டமன்ற அலுவலக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அடிப்படையில் ஒருவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால், அவர் உடனடியாக தனது பதவியை இழந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோரை தொடர்ந்து, பொன்முடியும் குற்றவழக்கில் தண்டனை பெற்று தனது பதவியை இழந்துள்ளார்.


பொன்முடி கைவசம் உள்ள வாய்ப்புகள் என்ன?


பொன்முடி மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருந்தாலும், அவரது அமைச்சர் பதவியை தற்போதைய சூழலில் அவரால் தக்கவைத்துக் கொள்ள முடியாது. அதேநேரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது கிடையாது என்பதால், வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்து தன் மீதான குற்றச்சாட்டுகள் போலியானது என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்புள்ளது. அதேநேரம், அடுத்த 30 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தை அணுகி, இடைக்கால உத்தரவோ அல்லது ஜாமீனோ பெறாவிட்டால் பொன்முடி சிறைக்கு செல்ல வேண்டியது இருக்கும் எனவும் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கோ, பட்டியலிடப்படுவதற்கோ தாமதமானால்,  பொன்முடி மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரனை அணுகி கூடுதல் அவகாசம் கேட்க வாய்ப்புள்ளது. ஒருவேளை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தால், 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை என பொன்முடியின் அரசியல் வாழ்க்கையே முற்றுபெறும். 


இது தொடர்பாக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ பேசுகையில், “ 2006 – 2011 ஆம் ஆண்டு காலத்தில் பொன்முடி அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் எண்ணத்தோடு தொடரப்பட்ட வழக்கில் கீழ் நீதிமன்றத்தில் விடுதலை கிடைத்தது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில், விசாரனை நிறைவு பெற்று கீழமை நீதிமன்றம் கொடுத்த உத்தரவை ரத்து செய்து குற்றவாளி என்று தீர்ப்பளித்து, தண்டனை காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்தனை வருட பழைய வழக்கு என்பதாலும், வயோதிக காரணத்தாலும் , கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது அதை உயர்நீதிமன்றம் மாற்றி எழுதியுள்ளது போன்ற காரணங்களால் 3 வருட சாதாரண சிறை தண்டனையும் , தலா 50 லட்சும் ருபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவற்கு 30 நாட்கள் சிறை தண்டனையை நிறுத்து வைத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அதில் அவர் விடுதலை செய்யப்படுவார். அவரது துணைவியார் அவர்கள் பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்தி  வருடத்திற்கு 5 கோடி ருபாய் அளவிற்கு வருமானம் வருவதாக கணக்குகள் காட்டப்பட்டுள்ளது.


பொன்முடியின் துணைவியார் அவர்கள்  குறித்த நேரத்தில் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறி தான் கீழமை நீதிமன்றம் கொடுத்த விடுதலையை ரத்து செய்துள்ளனர். 1996 – 2001 காலகட்டத்திலும் பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் ஆதாரங்களை பார்த்தால் , பொன்முடிக்கு குடும்ப சொத்தாக 100 ஏக்கர் சித்தூரில் இருந்ததும் , தொழிலை ஆரம்பிக்கும் போது பொன்முடியின் சகோதரர்கள் பெரும் அளவிற்கு முதலீடுகளை கொடுத்ததும் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் , சாட்சியங்கள் அடிப்படையில் மிக லாபகரமாக பொன்முடியின் மனைவி தொழிலை நடத்தி வந்தார் என்பதும் ,  வருடத்திற்கு 5 கோடி அளவிற்கான வியாபராம் செய்து வந்துள்ளார் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறித்த நேரத்தில் வருமான வரி செலுத்தவில்லை என்ற காரணம் தான் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறி விடுதலையை ரத்து செய்து தண்டனையை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. திமுக சட்டத்துறை சார்பில் மேல்முறையீடு செய்து விடுதலை பெற்றுத்தரப்படும்.


நீதிபதி என்பவர் எந்த சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர். ஆனால் சட்டத்தின் அடிப்படையில் , அதிமுக ஆட்சியின் போது அவர் சட்டத்துறை செயலாளராக பணியாற்றினார். அப்போது இந்த வழக்கில் இந்த சொத்துகளை முடக்கம் செய்வதற்கான கோப்புகளை அவர் கையாண்டுள்ளார். இந்த வழக்கு நடக்கும் போது அது தெரியவில்லை , நேற்றைக்கு தான் பொன்முடி அவர்களுக்கு தெரிய வந்தது.  அதை நீதிபதி அவர்களிடம் எடுத்து சொன்னோம். அப்போது நீதிபதி சொல்லும் போது, முன்னரே இதை தெரியப்படுத்தியிருந்தால்கூட இந்த வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன் என கூறினார். இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த ஒரு பிரச்சனை. அந்த பிரச்சனையை நாங்கள் நிச்சயம் உச்சநீதிமன்றத்திலும் எடுத்து வைப்போம்.


இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியை குறுக்கு விசாரனை செய்யும் போது , திரு பொன்முடி அவர்களின் வருமானத்திற்கும் , அவரது மனைவியின் வருமானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும்  , இந்த சொத்துகள் திரு பொன்முடி அவர்களின் வருமானத்தின் அடிப்படையில் வாங்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கீழமை  நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.  அதன் அடிப்படையில் தான் கீழமை நீதிமன்றம் இந்த வழக்கில் விடுதலை செய்தது. தற்போது கூட , குறித்த நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யவில்லை அது சந்தேகத்தை எழுப்புகிறது என்று தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


ஆவணங்களின் அடிப்படையில் பொன்முடி அவர்களின் மனைவிக்கு வருடத்திற்கு 5 கோடி ருபாய் அளவிற்கு வருமானத்தை ஈட்டும் தொழில் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளோம். குறித்த நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என கூறியிருக்கும் நிலையில் , உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உரிய நீதியை பெறுவோம்.


கொடுக்கப்பட்டிருக்கும் 30 நாட்களில் மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவோம். மேலும் , இந்த தண்டனையை நிறுத்தி வைக்க முயற்சி செய்வோம் . அப்படி உச்சநீதிமன்றம் சார்பில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் தகுதி இழப்பு என்பது இல்லாமல் ஆகிவிடும். திமுக மிக பலமாக இருக்கிறது , அதை கண்டு பாஜக பயப்படுகிறது என்பது தான் எதார்த்தம். 2024-க்கு பிறகு பாஜக வை சேர்ந்தவர்களின் பட்டியல்களும் வெளிவரும்” என குறிப்பிட்டுள்ளார்.