புதுச்சேரி: குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இன்று ஆரோவில் பங்கேற்கின்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களை அனுமதிக்க நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
குடியரசு தலைவர் ஆரோவில் வருகை :
இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று காலை புதுச்சேரிக்கு வந்த குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு இன்று காலை புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்கு காலை 10.30 மணிக்கு சென்று வழிபடுகின்றார். இதனைத்தொடர்ந்து புதுச்சேரி அருகேவுள்ள ஆரோவில் சர்வதேச நகரத்திற்கு சென்று அங்கு நடைபெறும் அரவிந்தரின் 150 வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்கின்றார். விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்கின்றனர்.
செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு
ஆரோவில் குடியரசு தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு செய்தியாளர்களுக்கு அனுமதியை மறுத்த ஆரோவில் நிர்வாகம் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிக்குறித்தும் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஆரோவில் நிர்மானப்பணியில் விதிமுறை மீறல் நடப்பதாக ஆரோவில் வாசிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வரும் நிலையில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை ஆரோவில் நிர்வாகம் ரகசியமாக வைத்துக்கொள்வதை வழக்கமாகி கொண்டு வருகின்றது.
ஆரோவில் வாசிகள் வளர்ச்சி பணிகளுக்கு எதிர்ப்பு;
ஆரோவில் என்பது ஒரு சர்வதேச நகரமாகும். இங்கு உலகம் முழுவதிலிருந்தும் வந்து 50,000க்கும் மேற்பட்டோர் வசிக்கக்கூடிய நகரமாக இது திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு சுமார் 52க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து குழந்தை முதல் 80 வயதுக்கு மேற்பட்டோர் வரை சுமார் 2500 பேர் வசித்து வருகின்றனர். இங்கு இந்தியர் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் உள்ளனர் .
மாத்ரி மந்திரைச் சுற்றி, இப்பகுதியை உருவாக்கிய அன்னையின் கனவு திட்டமான கிரவுன் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. வளர்ச்சிப் பணிக்காக அங்குள்ள மரங்களை வெட்டியதன் காரணமாக சில ஆரோவில் வாசிகள் வளர்ச்சி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே ஆரோவில்லில், இரு தரப்பினராக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
பதாகைகள் ஏந்தி ஒற்றுமை அமைதி பேரணி
இந்நிலையில், ஆரோவில் நிர்வாகத்தினர், பல்வேறு யூனிட்களில் பணியாற்றி வரும் சிலரை எந்த அறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்வதாகவும், நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படும் நபர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் ஒருதரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதே போன்று, வெளிநாடு செல்ல விரும்பும் ஆரோவில் வாசிகளை, நிர்வாகத்தினர் செல்ல விடாமல் பல்வேறு வழிகளில் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டிக்கும் வகையிலும், ஆரோவில் நிர்வாகத்தை கண்டித்தும், ஆரோவில் வாசிகளின் ஒரு தரப்பினர் பார்வையாளர் மையம் முன்பு இருந்து சோலார் கிச்சன் வரை பதாகைகள் ஏந்தி ஒற்றுமை அமைதி பேரணி மேற்கொண்டனர்.
ஆரோவில் முறைகேடுகளை அமலாக்கத்துறை விசாரிக்க வழக்கு :
ஆரோவில்லில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, அமலாக்கத் துறை விசாரிக்கக் கோரிய மனுவுக்கு, மத்திய அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த விக்ரம் ராமகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், ஆரோவில் பவுண்டேஷன் உள்ளது. இதை நிர்வகிக்க, தன்னாட்சி அதிகாரத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது. அதன்படி, நிர்வாக குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆரோவில் பவுண்டேஷன் நடவடிக்கைகளை நிர்வாகக் குழு கவனிக்கும். தற்போது பவுண்டேஷன் தலைவராக டாக்டர் கரண்சிங் உள்ளார்.
ஆரோவில் பவுண்டேஷனில் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. சட்டவிரோத நில பரிவர்த்தனைகள் பொருளாதார குற்றங்கள் நடக்கின்றனர். 100 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது இவற்றின் மதிப்பு கோடிக் கணக்கில் இருக்கும். ஆரோவில் அமைப்புக்கு தொடர்பு இல்லாதவர்கள் தனிப்பட்ட முறையில் அறக்கட்டளைகள், அமைப்புகளை துவங்கி, ஆரோவில்லை முன்னிறுத்தி பொது மக்களிடம் இருந்து நன்கொடை பெறுகின்றனர். ஆரோவில் பவுண்டேஷனுக்கு இந்தியாவுக்கு வெளியில் வங்கி கணக்கு எதுவும் இல்லை என தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்றுள்ளேன்.
ஆனால், ஆரோவில் இணையத்தில் இந்தியாவுக்கு வெளியில் வங்கி கணக்குகள் இருப்பதும் நன்கொடைகள் கோரப்பட்டிருப்பதும் தெரிகிறது. தனி நபர்கள் தான் பயனாளிகளாக உள்ளனர். ஆரோவில் சமூகத்தின் அங்கம் என கோரும் வெளிநாட்டவர்கள், குடியேற்ற சட்டத்தை மீறுகின்றனர். மேலும் விசா நிபந்தனைகளை மீறுகின்றனர். இதில் சிலர், குற்ற வழக்குகளிலும் தொடர்புடையவர்கள். ஆரோவில் பவுண்டேஷனில் நடக்கும் முறைகேடுகள் குறித்து அமலாக்கத் துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. ஆரோவில் பவுண்டேஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நிர்வாகக் குழுவின் விசாரணை அறிக்கை, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் பெற, மத்திய அரசு வழக்கறிஞர் அவகாசம் கோரினார். இதையடுத்து, விசாரணையை, செப்டம்பர் 21ம் தேதிக்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.