வலைதள உலகம் அசுர வளர்ச்சியின் தாக்கத்தை அன்றாடம் நாம் அனைவரும் எதிர்கொண்டுதான் வருகின்றோம். அதிலும் குறிப்பாக சமூக வலைதள ஊடகங்களின் பெருக்கம் என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களை ஒரு குடையின் கீழ் இணைத்து விடுகின்றது. அப்படியான சமூக வலைதள ஊடகத்தில் மக்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தபோது அதனை சிறப்பான முறையில் பயன்படுத்தி வளர்ச்சி அடைந்தவர்கள் என பலரை நம்மால் இன்றைக்கு அடையாளம் காட்ட முடியும். அதேநேரத்தில் சமூக வலைதளத்தில் தனது ஃபாலோவையர்களை கவர்வதற்காக பல விநோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு சிலர் மலைகள், கடல்கள் உள்பட, யாருமே இன்னும் செல்லாத பல இடங்களுக்குச் சென்று வீடியோக்களை பதிவு செய்து, லைக்குகளையும் ஃபாலோவர்ஸ்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தும் நபர்கள் இன்றைய காலகடத்தில் அதிகமாகிவிட்டது.
அப்படி லைக்குக்காக நடைபெற்ற ஒரு நிகழ்வு மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில், மக்கள் பரபரப்பாக இயங்கும் மாலை நேரம். பள்ளி மற்றும் கல்லூரிக்குச் சென்று திரும்பிய மாணவ மாணவியர்கள், வேலைக்குச் சென்று திரும்பியவர்கள் என அண்ணா பேருந்து நிலையமே கூட்டத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது.
அப்போது அங்கு மூன்று பேர் கொண்ட குழு இரு சக்கர வாகனத்தில் வந்தது. அதில் பெண் ஒருவரை ஆண் தூக்கிக்கொண்டும் கொஞ்சிக்கொண்டும் சென்றுள்ளார். இதனை அவர்களுடன் வந்த மற்றொருவர் படம் பிடித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள் சிறிது நேரம் அவர்களை ஏதோ சினிமா, எடுக்கின்றனர் என வியந்து பார்த்துள்ளனர். அதன் பின்னர் தான் சிலர் அவர்களை அடையாளம் கண்டுள்ளனர்.
அதாவது அவர்கள் இருவரும் அண்மையில் காதலித்து திருமணம் செய்தவர்கள் என்றும், அவர்கள் இன்ஸ்டாகிராமில் அவர்களுக்கென தனி பக்கம் ஒன்றைத் தொடங்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருபவர்கள் என்றும் கூறியுள்ளனர். இவர்கள் வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பும் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் வீடியோ எடுத்ததை அங்கிருந்தவர்களில் யாரோ வீடியோ எடுத்திருக்கிறார். மேலும், மக்கள் அதிகம் கூடும் பகுதியில் லைக்கிற்காக இவ்வாறு செய்வதை இதுபோன்றவர்கள் தவிர்க்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.