வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் அக்டோபர் மாதம் அடுத்தடுத்து புயல் சின்னங்கள் உருவாகி தமிழகத்தில் மழை பெய்த நிலையில், நவம்பர் மாதம் முதல் 15ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நீடித்தது. இதனையடுத்து வங்க கடலில் மீண்டும் உருவான காற்றழுத்த தாழ்வ பகுதியால் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டியது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலவிய "டிட்வா" புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை கடந்து நாளை (30-ஆம் தேதி) அதிகாலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் சூறைக்காற்றோடு மழையானது நேற்று காலை முதல் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த புயல் தற்போது டெல்டா மாவட்டங்கள் அருகே நிலவி வருகிறது. இன்று இரவு அல்லது நாளை காலை வட மாவட்டங்களான சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில், டிட்வா புயல் இன்று (29.11.2025) காலை 5:30 மணி நிலவரப்படி நாகைக்கு தெற்கே-தென்கிழக்கே 190 கிமீ, காரைக்கால் 200 கிமீ தொலைவில் மையம்கொண்டுள்ளது. நாகை மாவட்டம் தோபுத்துறையில் 18 செ.மீ, நாலுவேலுபதி 17 செ.மீ தற்போது வரை பதிவாகியுள்ளது.
சென்னையில் 2நாட்களுக்கு கனமழை
இப்புயல் தொடர்ந்து வடக்கு திசையில் பயணித்து அடுத்த சில மணி நேரங்களில் டெல்டா கடற்கரை அடைந்து வலுபெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். டெல்டாவில் புயலின் முன்பகுதி நிலப்பகுதியில் ஊடுருவலை ஏற்படுத்தும் என எதிர்பபார்க்கப்படுவதாகவும்,தற்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை துவங்கியுள்ளது, வரும் மணி நேரங்களில் படிப்படியாக அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
புயல் மேற்கு டெல்டாவில் கரையேறும் போது இன்று (நவம்பர் 29) பகலில் அதிகனமழை பெய்யும் என தெரிவித்துள்ளவர் காவிரி டெல்டா மக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார். காவிரி டெல்டாவில் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு இன்று மாலை அல்லது இரவு முதல் புயல் மீண்டும் வடக்கு திசையில் பயணிக்க துவங்கும். அப்போது சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் வரும் மணி நேரத்தில் மழை துவங்கி இன்று (29.11.2025) இரவு முதல் (01.12.2025) காலைக்குள் பரவலாக கன முதல் மிக கனமழையும், அதித கனமழையும் ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் காவிரி படுகை மாவட்ட மக்கள் இன்று வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.