வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா  புயல் தமிழக கடற்பகுதியை நெருங்கியுள்ள நிலையில் உஷார் நிலையில் அனைத்து மாவட்டங்களும் வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

டிட்வா புயல்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மிதமான முதல் கனமழை வரை கொட்டித்தீர்த்து வருகிறது. இப்படியான நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரை செய்த டிட்வா பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. 

இந்த புயலானது சென்னைக்கு தென் கிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது. இந்த புயலால் இலங்கை நாடு முழுவதும் கனமழை, வெள்ளப்பெருக்கால் சின்னாபின்னமாகியுள்ளது. இதன் தாக்கம் இராமேஸ்வரம், பாம்பன் தீவுகளிலும் எதிரொலித்தது. கடல் சீற்றம், 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Continues below advertisement

உஷார் நிலையில் தமிழகம்

இந்த நிலையில் டிட்வா புயல் வடதமிழகத்தை நெருங்குவதால் மிகப்பெரிய அளவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலானது இலங்கை நிலப்பரப்பில் இருந்து முழுவதுமாக விலகி டெல்டா மற்றும் வட இலங்கை கடல் பகுதிகளை நவம்பர் 29ம் தேதியான சனிக்கிழமை காலை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. 

அப்போது காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் உயர் அழுத்தம் காரணமாக டெல்டா கடற்கரையை டிட்வா புயல் நெருங்கும்போது மெதுவாகவோ அல்லது நின்று செல்லவோ வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மணி நேரங்களில் டெல்டா நிலப்பரப்பில் இருக்கும் டிட்வா புயல் அதன்பின் வலுவான நிலையிலே வடக்கு நோக்கி நகர்ந்து கடலூர், புதுச்சேரி, சென்னை ஆகிய வட கடலோர மாவட்டங்களை வந்தடையும் என கூறப்படுகிறது.

இதனால் அனைத்து மாவட்டங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு தயார் நிலையில் இருக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, அரியலூர், கடலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று விட்டு விட்டு கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிட்வா புயல் காரணமாக இன்று காலை முதல் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்க தொடங்கும். மணிக்கு 55 கிலோ மீட்டர் தொடங்கி 80 கிலோ மீட்டர் வரை தரைக்காற்று வீசத் தொடங்கும் என்பதால் பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.