தமிழ்நாடு முழுவதும் வரும் வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படுவதை தொடர்ந்து, அதற்கு அடுத்த நாளான நவம்பர் 5-ஐ( வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,


“ வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விழாவை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக 5-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பில் இருந்தும் கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன.


அக்கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான 5-ந் தேதி வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும், அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையிலும் வரும் 20-ந் தேதி அன்று பணிநாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது.




மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலவாணி சட்டம் 1981ன்படி அறிவிக்கப்படவில்லை என்பதால் அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கும். ஆனால், தீபாவளி திருநாளில் ஒருநாள் மட்டுமே விடுமுறை கிடைக்கும். இதனால், வௌியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், வெளியூர்களில் தங்கி படிப்பவர்கள், பணிபுரிபவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று உடனடியாக பணிக்கோ, கல்வி நிறுவனங்களுக்கோ திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும்.




இருப்பினும் வெள்ளி அல்லது திங்கள் கிழமை போன்ற நாட்களில் தீபாவளித் திருநாள் வந்தால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் செலவிடுவார்கள். இந்த நிலையில், நடப்பாண்டில் தீபாவளியானது வியாழக்கிழமை, கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.


சென்னை கோயம்பேட்டில் தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் நேற்று இரவு முதல் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இன்று காலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களை தங்களது குடும்பத்தினருடன் செலவிடுவார்கள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண