TN GOVT Employees Retirement Age: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த இருப்பதாக பரவும் தகவல் வெறும் வதந்தியே என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.


தமிழக அரசு விளக்கம்:


அரசு ஊழியர் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தப் போவதாகப் பரவும் தகவல் என, தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு அமைப்பு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில்,


”வதந்தி: அரசு ஊழியர் ஓய்வு வயது 60-லிருந்து 62 ஆக மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 15 தினத்துக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளது' என்ற தகவல் பரப்பப்படுகிறது.


உண்மை என்ன?


இது முற்றிலும் வதந்தியே. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. ஆலோசனையும் இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு குறித்து எந்த வதந்தியும் பரப்ப வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


 






ஓய்வு வயது 60:


தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது என்பது 58 ஆகும். ஆனால், நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு வயது  60 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தான், மீண்டும் அரசு ஊழியர்களின் பணிக்காலத்தை 62 ஆக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியானது. 


எதிர்க்கட்சிகள் கண்டனம்:


ஓய்வு வயதை உயர்த்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 40 சதவிகிதம் பேர் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஓய்வுபெறவிருக்கும் நிலையில், அவர்களுக்கான பணப்பலன்களை வழங்குவதற்கான நிதி இல்லாத காரணத்தை சுட்டிக்காட்டி அரசு இம்முடிவை எடுத்திருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. எனவே இந்த முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார்.