டிசம்பர் மாதம் வந்தாலே தமிழ்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை அலாரம் அடிக்கத் தொடங்கிவிடும். 2004 சுனாமி, 2005 ஃபனூஸ் புயல் தொடங்கி 2016ல் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம், 2021 முப்படைத்தளபதி மரணம் என இந்தப் பட்டியல் நீளம்.


முப்படைத் தளபதி பிபின் ராவத் மரணம்


இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் சென்ற Mi17 V5 ராணுவ ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் நிலவிய பனிமூட்டம் காரணமாக மலை முகடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மதுலிக்கா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.




ஜெயலலிதா மரணம்




தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறைப் பதவி வகித்த ஜெயலலிதா டிசம்பர் 5 2016ல் நாட்பட்ட நோய் சிகிச்சையின் பின் உயிரிழந்தார். அவரது மரணத்தைச் சுற்றி பல கேள்விகளுக்கு இன்றுவரை விடை கிடைக்காமல் சர்ச்சை தொடர்கிறது. 


எம்.ஜி.ஆர் மரணம்


ஜெயலலிதா மட்டுமல்ல அதிமுகவை உருவாக்கிய தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களில் ஒருவரான எம்.ஜி.ராமச்சந்திரனின் மரணமும் டிசம்பரில்தான் சம்பவித்தது.  நாட்பட்ட சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 24 டிசம்பர் 1987ல் தனது 71வது வயதில் மரணமடைந்தார். 


சுனாமி - ஆழிப்பேரலை






இந்தியா அதுவரை கண்டிராத நிலநடுக்கமாக இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.அது தமிழ்நாட்டின் கரையோர மாவட்டங்களைப் பெரிதும் தாக்கின. நாகைப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 6000 பேர் இறந்தனர்.ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் 8000 பேர் உயிரிழந்தார்கள். 


புயல் வெள்ளம்






டிசம்பர் என்றாலே புயலும் வெள்ளமும் அழையாத விருந்தாளியாக தமிழ்நாட்டைத் தாக்கும். 2005ல் ஏற்பட்ட ஃபனூஸ் புயலில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 25000 பேர் மறுகுடியமர்வு செய்யப்பட்டார்கள். பயிர்ச்சேதம் கணக்கில் அடங்காததாக இருந்தது.2011 புயலில் 46 பேர் மரணம் அடைந்தார்கள். 2015 பெருவெள்ளம் 
மாநிலத்துக்கு சுமார் 8481 கோடி ரூபாய் அளவிலான பொருள் சேதத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து ஏற்பட்ட வர்தா புயல் 12 பேரை பலிகொண்டது. இந்த வருடமும் வங்கக்கடலில் உருவான ஜவாத் புயலால் பெருத்த சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.