தனது 19 வயது மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க அதனைக் காண சகிக்காத தாய் எனது சிறுநீரகத்தையாவது பொருத்தி மகனைக் காப்பாற்றுங்கள் எனக் கதறியிருக்கிறார்.
விளைவு, மருத்துவப் பரிசோதனைகளை துரிதப்படுத்திய மருத்துவர்கள் இருவருக்கும் சிறுநீரகம் பொருந்திப் போவதை அறிந்து அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டனர். இதோ அந்த தாயுள்ளம் காப்பாற்றிய மகன் புத்துணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அந்த இளைஞருக்கு சிறுநீரகம் மாற்றப்பட்ட கதையை விரிவாகக் காண்போம்:
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சிவானந்தம். இவரது 19 வயது மகன் வைத்தீஸ்வன். இவருக்கு சில மாதங்களாக சிறுநீரக பாதிப்பு இருந்து வந்தது. இதனையடுத்து திருச்சி அரசு பொது மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வாரம் 2 முறை டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார் வைத்தீஸ்வரன். ஆனாலும் அவரின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. இதனையடுத்து வைத்தீஸ்வரனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிரைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
வசதியற்ற குடும்பம். உடனடியாக சிறுநீரகத்துக்கு எப்படி ஏற்பாடு செய்ய முடியும்? மகனின் நிலையை உணர்ந்த தாய் கொஞ்சமும் யோசிக்கவில்லை. எனது சிறுநீரகத்தை எனது மகனுக்கு பொருத்துங்கள் என்றார்.
இதனையடுத்து இருவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. திருச்சி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
மகனின் உயிரை காப்பாற்ற தாய் தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்தது பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கான அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் 6 லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகியிருக்கும் என்று திருச்சி அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் உறுப்பு தானம்
உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டுதனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது அப்பா, அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும்) 2 சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலின் ஒருபகுதியை தானமாக வழங்க முடியும். உயிரிழந்த ஒருவரிடமிருந்த கண்களை (கருவிழியை) தானமாகப் பெற முடியும்.
அதேபோல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண், இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு, தோல்உள்ளிட்ட உறுப்புகளை தானமாகப்பெறலாம். இதன்மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.
எப்படி பதிவு செய்து கொள்வது?
தமிழக அரசின் www.tnos.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான அடையாள அட்டையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்தவர்கள் கண்டிப்பாக உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தானம் செய்தவர் இயற்கையாக இறந்தாலோ அல்லது மூளைச்சாவு அடைந்தாலோ அவரது குடும்பத்தினர்களின் அனுமதியுடன்தான் உறுப்புகள் தானமாக பெறப்படும்.
உடல் உறுப்பு தானத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறவும், வழங்கவும் ஆதார் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.