உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு வாரமாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆரம்பத்தில் போர் மிதமாக நடந்தபோதும் நாளுக்கு நாள் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் நாட்டின் தலைநகர் கிவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றின்மீது ரஷ்யப் படைகள் மிகவும் தீவிரமாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதனால், அங்கு சிக்கி இருக்கும் இந்திய மாணவ மாணவிகளை மீட்டு வர இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. 


இந்நிலையில், ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதலில் சிக்கி இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்னொரு மாணவர், உடல்நல பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்துள்ளார். உக்ரைனில் உயிரிழந்த மாணவன் நவீனின் உடல் இன்னும் இந்தியா கொண்டு வரப்படாத நிலையில், இது குறித்து கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் பெல்லட் சர்ச்சையான கருத்தை முன்வைத்திருக்கிறார். 


“உக்ரைனின் நிலைமையை அனைவரும் டிவியில் பாத்திருப்பீர்கள். இது போன்ற அசாதாரண சூழலில், இறந்த மாணவனின் உடலை கொண்டு வருவதில் சிக்கல் நிலவுகிறது. நாடு திரும்பும் விமானத்தில் சடலத்தை வைக்கும் இடத்தில் உயிருள்ள 10-12 பேரை அழைத்து வரலாம். எனவே, வழக்கமான விமான சேவையை தொடங்கிய பிறகு மாணவனின் சடலம் கொண்டு வரலாம்” என தெரிவித்திருக்கிறார். பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சையான கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சர்ச்சைப்பேச்சு பாஜகவின் மரபணுவை காட்டுவதாக காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜீவாலா தெரிவித்துள்ளார்.






போர் தீவிரமாகி வரும் நிலையில் ரஷ்யாவை எதிர்த்து ஐநாவில் தீர்மானம் நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று முறை நடந்த வாக்கெடுப்பில், இந்தியா பங்கேற்கவில்லை. ரஷ்யாவுக்கும் ஆதரவு அளிக்காமல், உக்ரைனுக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்து வருகிறது. உக்ரைனில் தங்கி இருக்கும் 20,000 இந்திய மாணவ மாணவிகளை பத்திரமாக மீட்கவே, இந்தியா நடுநிலை வகித்து வருவதாக தெரிவித்து வருகிறது. 


தொடர்ந்து இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளால், உக்ரைனில் சிக்கி இருந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளை நாட்டுக்கு அழைத்து வந்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இன்னும் அங்கு சிக்கி இருக்கும் மாணவ மாணவிகளை மீட்டு வர விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண