கலைமாமணி விருது வென்ற நடனக்கலைஞரும் திமுகவை சேர்ந்தவருமான ஜாகீர் உசேன் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடனக்கலைஞரான ஜாகீர் உசேன் பிறப்பால் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பரதநாட்டியம் மீதான ஈர்ப்பு காரணமாக குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறியவர். குருகுல முறையில் தங்கி பரதம் பயின்று வைணவத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல்வேறு இடங்களில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியவர். இவரின் பரதநாட்டிய பங்களிப்பை பாராட்டி இவருக்கு தமிழ்நாடு அரசின் கலைமாணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் தான் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தொடர்பாக நடனக்கலைஞர் ஜாகீர் உசேன் பதிவிட்டுள்ள முகநூல் பதிவில், நான் என் தாய்வீடாக கருதும் , தினம் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரவங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டேன் . காரணம் என் பெயர். முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக் கொண்டிருக்க அரங்கனைக் காண தடைசெய்யப்பட்டு , பல அவமானங்களுக்கிடையே துரத்தப் பட்டேன். இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது. என்னை துரத்தியவன் ஒரு நடத்தை கெட்டவன் மட்டுமல்ல. இந்நாட்டின் இறையாண்மைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எதிரானவன். காலம் , திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்குத் துணை என பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் எனக்கு மன அழுத்தத்தால் ஏதேனும் நிகழ்ந்தால், அதற்கு என்னை திருவரங்கத்தை விட்டு வெளியேற்றியவனே பொறுப்பு எனவும் முகநூலில் பதிவிட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவனையில் சிகிச்சை பெறும் படங்களும் முகநூலில் பதிவேற்றப்பட்டுள்ளது. 


 



ஜாகீர் உசேன் என்று பெயர் வைத்த காரணத்தால் பரதநாட்டிய கலைஞர் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு விவாதங்கள் சமூகவலைத்தளங்களில் எழுந்துள்ளது. இது தொடர்பாக கவிதா ராமு ஐஏஎஸ் தனது முகநூல்பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவும் கவனம் பெற்று வருகிறது.



அதில் வைணவத்தலங்களில் ஜாகீர் உசேன் செய்துள்ள கைங்கரியங்களை விளக்கி அதில் பதிவிடப்பட்டுள்ளது. 


Kola Pasi Series-6 |மலைக்கோட்டை TO புதுக்கோட்டை வரை - மண் மணக்கும் உணவும் சமூக பொறுப்பும்...!