வாக்காளர் பட்டியல் - 97 லட்சம் பேர் நீக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை ஒரு பக்கம் தொடங்கியுளளது. அதே நேரம் தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்த பணியின் மூலம் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே 6 கோடியே 41 லட்சத்து 14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், 5 கோடியே 43 லட்சத்து 76,755 வாக்காளர்களாக குறைந்துள்ளனர். இதனையடுத்து பெயர் விடுபட்டவர்கள், பெயரை சேர்க்க வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த சனி மற்றும் ஞாயிறு சிறப்பு முகாம் நடைபெற்றது. தற்போது தினந்தோறும் சிறப்பு முகாம நடைபெறவுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று முதல் சிறப்பு முகாம்
இது தொடர்பாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் அமையப்பெற்ற 979 இடங்களிலும் 23.12.2025 முதல் 18.01.2026 வரை அனைத்து நாட்களிலும் (பண்டிகை நாட்கள் நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான படிவங்களை வழங்கிடவும், பூர்த்தி செய்து படிவங்களைப் பெறுவதற்கும் ஒவ்வொரு இடத்திலும். ஒரு வாக்குச் சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் நியமனம்
தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு வார்டு அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் இணைய தளத்திலும் (VOTERS' SERVICE PORTAL) பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். இதனைப் பார்வையிட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கானப் படிவங்களை இங்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம், படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கிடலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மைய எண் 1913ல் தொலைபேசியின் வாயிலாக கேட்டும் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.