"திருமணமான 9 நாட்களில் குன்றத்தூர் அருகே மனைவியை கொலை செய்து விட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது"
காதல் ஜோடி
சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை, தளபதி தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவர் விஜய் (25). விஜய் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தவர். தன்னுடன் பணிபுரிந்து வந்த சாப்ட்வேர் பெண் என்ஜினியரான யுவஸ்ரீ (24), என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த 13ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு, குன்றத்தூர் பகுதியில் இருவரும் வாடகைக்கு வசித்து வந்தனர்.
மர்மமான முறையில் மரணம்
நேற்று இரவு வீட்டில் இருந்து இருவரும் வெளியே வராத நிலையில், அந்த பெண்ணின் தங்கை சென்று பார்த்தபோது, கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த கட்டிலில் யுவஸ்ரீ இறந்த நிலையிலும், விஜய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட கணவன்
இதையடுத்து இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காதல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் திருமணம் நடந்த பிறகு கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையின் போது, கணவன் கோபத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்திற்கு வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஒன்பது நாட்களில் சாப்ட்வேர் என்ஜினியர் புதுமன தம்பதிகள் இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யுவஸ்ரீ உடம்பில் காயங்கள் இல்லாத நிலையில், அவரது முகத்தில் தலையணை போன்ற பொருளை பயன்படுத்தி, மூச்சு திணற வைத்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.