அடுத்த 36 மணி நேரத்தில், லட்சத்தீவு மற்றும் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி புயலாக மாற வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக, ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப கடலோர காவல் படை தெரிவித்திருந்தது. மீனவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு திரும்ப வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


தாக்டே புயல், முக்கியமான 10 அப்டேட்ஸ்!


1. புயல் காரணமாக, லட்சத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2. மே 16-ஆம் தேதி வரை கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


3. மே 15-ஆம் தேதி கேரளாவிலும், மே 16-ஆம் தேதி கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.



4. ரெட் அலர்ட் என்பதால் கடலோர பகுதியில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.


5. மே 16,17,18 தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


6. கேரளாவில் உள்ள எர்ணாகுளம், ஆலப்புழா, கோட்டையம், இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலெர்ட் என்றால் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அர்த்தம். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்.



7. லட்சத்தீவுகள், கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.


8. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள கடலோர பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்


9. இந்தியா வானிலை மையம், மே 17-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.


10. புதிதாக உருவாக இருக்கும் புயலுக்கு ‘தாக்டே புயல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயரை சூட்டியது மியான்மர் நாடு.